தேமுதிக பொதுச் செயலாளரும், நடிகருமான விஜயகாந்த்தின் 68 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் வறுமை ஒழிப்பு தினமாக இன்று (ஆகஸ்ட் 25) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது, துணைச் செயலாளர் சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். கொரோனா காலம் என்பதால் அவரை யாரும் சந்திக்க முடியவில்லை. அடுத்த வருடப் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடுவோம். அனைவரும் அவரை சந்திக்கலாம்” என்று குறிப்பிட்டார்.
 
தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தேமுதிக தயாராகி வருகிறது என்று கூறிய பிரேமலதாவிடம், வரும் தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதுபற்றி பேசும்போது, ``அதிமுகவுடன் கூட்டணி தற்போது வரை தொடர்கிறது. ஆனால், சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பின்னர் முடிவு எடுக்க உள்ளோம். டிசம்பர் மற்றும் ஜனவரியில், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டி கூட்டணி பற்றி முடிவு எடுக்க வேண்டும். தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை தொண்டர்களும் நிர்வாகிகளும் முன்வைக்கிறார்கள். கிங் மேக்கராக இல்லாமல் விஜயகாந்த் கிங் என்ற நிலைக்கு மாற வேண்டும் என்பதுதான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்பமாகும். இதுபற்றி பொதுக்குழு மற்றும் செயற்குழு ஆகியவற்றை கூட்டி விஜயகாந்த் முடிவை அறிவிப்பார்" என்றார்.

தேமுதிக தற்போது, அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் அடங்கிய கூட்டணியில் உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின் போது இந்த கூட்டணி இணைந்து போட்டியிட்டது. இருப்பினும், தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளரான ரவீந்திரன் வெற்றி பெற்றார். வேறு எந்த தொகுதியிலும் இந்த கூட்டணி வெற்றிபெறவில்லை.

அடுத்த வருடம், சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், கூட்டணியை மாற்றுவது குறித்து பிரேமலதா ஆலோசித்ததாக தெரிகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தப் பேட்டி. வழக்கமாக எந்த ஒரு சட்டசபை தேர்தல் காலத்திலும், அல்லது லோக்சபா தேர்தல் காலத்திலும், தேமுதிக தங்கள் ஆதரவு எந்த கட்சிக்கு என்பதை கடைசிவரை சொல்லாமல் இருந்ததுதான் வழக்கம்.

கடந்த முறை திமுக தலைவர் ஸ்டாலின், விஜயகாந்த் வீட்டுக்கு நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். விஜயகாந்த் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க வந்ததாக அவர் கூறியிருந்தார். அதேபோல அதிமுக தலைவர்களும், விஜயகாந்த் வீட்டுக்கு சென்றனர். இரு கட்சிகளும், தேமுதிக கூட்டணிக்கு வரவேண்டும் என்று விரும்பிய நிலையில், இழுத்தடித்து அதிமுக பக்கம் செல்வதாக அறிவித்தது தேமுதிக.

இந்த நிலையில்தான், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இப்போதே கூட்டணி பற்றி பேசி வழக்கமான பாணியை கையில் எடுத்துள்ளது தேமுதிக என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஒவ்வொரு முறையும், தேமுதிக தனித்து போட்டியிடும் என்று கூறுவதும், பிறகு ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதும், வழக்கம்தான் என்கிறார்கள் அவர்கள். கடந்த சட்டசபை தேர்தலின்போது, தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை போன்றவை இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.