வன்னியர்களுக்கு 20 சதவீத  இடஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி, இன்று (டிசம்பர் 1) நடத்தி வரும் போராட்டத்தால் சென்னையில் தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. பல்லவன் இல்லம் அருகே நடந்த போராட்டத்தில் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்றார். அப்போது பேசிய, அன்புமணி ராமதாஸ் எம்.பி., 'இட ஒதுக்கீடு போராட்டம் அரசியல் பிரச்சினை அல்ல, உரிமை பிரச்சினை' என்றார். 

நேற்றைய தினம் இதுகுறித்து பேசியிருந்த அன்புமணி ராமதாஸ், அப்போது, ``வன்னியர் 20% தனி இடஒதுக்கீட்டுக்கான நமது வெற்றியை நாளை போராட்டம் சொல்லும்!
   
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் மாபெரும் பெருந்திரள் போராட்டம் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. போராட்டத்திற்கு இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில் போராட்டக் களத்திற்கு புலியென  புறப்படுவதற்கான ஆயத்தப்பணிகளில் சிங்கக் குட்டிகளாகிய நீங்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள்.

சமூகநீதி போராட்டம் என்பது முடிவில்லாதது. பல்வேறு தரப்பினருக்காக, பல்வேறு கோரிக்கைகளுக்காக  சமூக நீதி போராட்டம் நீண்டு கொண்டே இருக்கும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கக் கோரும் முதற்கட்ட போராட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் நாளை தொடங்குகிறது. அடுத்தக்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள்திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் என பல நிலைகளில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தவிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் மாபெரும் நிறைவு கட்ட போராட்டம் அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ளது. அப்போராட்டத்தின் வடிவமும், போராட்ட தேதியும் விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும். இந்தப் போராட்டங்கள்  எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை; அது இங்கு ஒரு பொருட்டுமல்ல.

ஆனால், இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்; நமது கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை நேற்று மாலை 6.00 மணிக்கு எனக்கு ஏற்பட்டு விட்டது. ஆம்.... பாட்டாளி சொந்தங்களால் வளர்க்கப்படும், வழிகாட்டப்படும் தம்பிகள், தங்கைகள், இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோருடன் நேற்று நடத்திய உரையாடலும், அவர்களிடத்தில் நான் கண்ட உறுதியும், உணர்வும் தான் எனக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. அந்த நம்பிக்கை பொய்க்காது.

அனைத்துக்கும் மேலாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்காக நாம் சமரசமின்றி போராட வேண்டியதன் தேவை குறித்தும் வாக்களிக்கும் வயதை எட்டாதவர்கள் கூட புரிந்து கொண்டுள்ளனர். இப்புரிதலும், உணர்வும் மட்டுமே நமது போராட்டம் வெல்ல  போதுமானவை.

இப்போது என்ன கோரிக்கையை முன்வைத்து போராடுகிறோமோ, அதே கோரிக்கையை முன்வைத்து 1987-ஆம் ஆண்டு நாம் நடத்திய ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. அதற்காக நாம் மேற்கொண்ட முன்னேற்பாடுகள் ஏராளமானவை. தமிழ்நாட்டில் எனது கால்படாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு,  வரப்புகளிலும், முள் பாதைகளிலும் நடந்து சென்று போராட்டத்திற்கு மக்களை தயார் செய்தேன். ஆனால், இப்போது ஒரு சில வாரங்களிலேயே அதை விட கூடுதலான எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். அதற்குக் காரணம் நாம் முன் வைத்துள்ள கோரிக்கையில் உள்ள நியாயம் தான். அதனால் தான் சொல்கிறேன்.... வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் வெற்றி பெறுவது உறுதி.

சமூகநீதி அளவில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்று ஒன்று இருந்தால் அது வன்னியர் சமுதாயம் தான். விவசாயியாக, கட்டுமானத் தொழிலாளர்களாக, நாட்டைக் காக்கும் பணியில் பாதுகாவலர்களாக, ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பவர்களாக வன்னியர் சமுதாயம் இருந்தாலும் கல்வியும், வேலைவாய்ப்பும் மட்டும் இன்னும் அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அந்த நிலையை மாற்றி சமூகநீதி என்ற கனியை வன்னியர்களும் சுவைக்க வேண்டும் என்பதற்காகவே இப்போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த உண்மையை நாமும் உணர்ந்து கொண்டு, மற்ற சமுதாயங்களுக்கும் புரிய வைத்திருக்கிறோம்"

என கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று போராட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, போராட்டத்துக்கு இடையே, முதலமைச்சர் பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் திடீர் என சந்தித்து பேசினார்.அப்போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத  இடஒதுக்கீடு அளிக்க முதல்வரிடம் வலியுறுத்தினார். முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

20 சதவீத  இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் மனு அளித்துள்ளோம். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத  இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை போராட்டத்தை அமைதியான வழியில் முன்னெடுக்க பாமக தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறேன். எந்த அமைப்புக்கோ, அரசியல் கட்சிக்கோ எதிரான போராட்டம்  இது கிடையாது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மிகமிக பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள்.

எங்களது கோரிக்கை தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பேன் என்று முதலமைச்சர் உறுதி அளித்து இருக்கிறார். எங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்களது போராட்டம் 40 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது" என கூறினார்.