கபாலி, காலா படத்திற்குப் பிறகு ஆர்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார் இயக்குனர் பா. ரஞ்சித். இப்படம், வடசென்னை குத்துச்சண்டை வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இது, 1980-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்ட படமாகும். 

ஆர்யா 30 என தலைப்பிடப்பட்ட இப்படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது. வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. இந்த படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றியுள்ளார் ஆர்யா. ரஞ்சித் சார் நான் ரெடி என படப்பிடிப்பிற்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் ஆர்யா. 

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார். படத்தில் வடசென்னை பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் தெரியவந்தது. நடிகர் கலையரசன், ஜான் கொக்கென், ஷபீர், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். 

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்யா. அதில் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்து பாக்ஸிங் செய்தபடி போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை பதிவில் தெரிவித்துள்ளார். 

அனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் அரண்மனை 3 படப்பிடிப்புக்கு பின்னர் இதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யா நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார்.