திருவண்ணாமலை அருகே “கனவில் வந்த மாமியார் மாமனார் என்னை அழைத்ததால், மகளை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்யப் பார்த்தேன்” என்று, சிறுமியை கொன்ற தாய் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன், விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா, கணவருக்கு உதவியாக விவசாய வேலைகளைப் பார்த்து வருகிறார். கலையரசன் - சுகன்யா தம்பதிக்கு 6 வயதில் நிவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. 

இதனிடையே, கடந்த ஆண்டு கலையரசனின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

மாமனார் - மாமியார் மீது அதிக பாசம் வைத்திருந்த சுகன்யா, அவர்களது பிரிவைத் தாங்க முடியாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஆடிப்பெருக்கு என்பதால், வீட்டில் காலையில் பூஜைகள் செய்த பிறகு, கடைக்குச் சென்று மட்டன் எடுத்து வீட்டில் கொடுத்து, சமைக்கச் சொல்லிவிட்டு, கலையரசன், அவரது தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.

அதன் பிறகு, மதியம் வீட்டிற்குச் சாப்பிட வந்த கலையரசன், வீட்டிற்குள் நுழைந்து மனைவியைத் தேடிய போது கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அங்கு, வீட்டின் பின்புறம் மனைவியும், மகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்துப் பதறிப் போய், கதறித் துடித்துள்ளார்.

அத்துடன், அழுதுகொண்டு, மகள் நிவேதா அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது, கழுத்தறு பட்டு உயிரிழந்த நிலையில், மகள் நிவேதா சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து இன்னும் கதறி அழுத அவர், மனைவியை பார்த்துள்ளார். அவர் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

இதனையடுத்து, கலையரசன் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுகன்யா மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, சுகன்யாவுக்கு முதல் உதவிகள் அளிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு உயர் சிகிச்சைக்காகச் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த தண்டராம்பட்டு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். பலரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சுகன்யாவிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றனர். அப்போது, “கடந்த ஆண்டு உயிரிழந்த என் மாமனார் - மாமியார் என்னிடம் கனவில் வந்து தங்களிடமே வந்துவிடும்படி அழைத்தார்கள். மேலும், அவர்கள் அழைப்பது எனக்கு அசரீரி குரலாக ஒளித்தது.

இதனால் தான் எனது குழந்தையை நானே கொலை செய்து விட்டு, பின்னர் நானும் தற்கொலைக்கு முயன்றேன்” என்று கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இது குறித்து கலையரசனிடமும் போலீசார் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு, இன்னும் அதிர்ச்சியடைந்த கலையரசன் மீண்டும் கதறித் துடித்தார். மேலும், இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இறந்த மாமனார் - மாமியார் அசரீரி குரலில் அழைத்ததாகக் கூறி, பெற்ற மகளையே கழுத்தறுத்துக் கொலை செய்த தாய், அதன்பிறகு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், திருவண்ணாமலை பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.