சென்னையில் காதல் தோல்வியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா” என்று, மகன் எழுதி வைத்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கி உள்ளது.

சென்னை மதுரவாயில் அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் இயங்கி வரும் பிரைட் ஆட்டோ காம்பனட்ஸ் நிறுவனத்தில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 28 வயதான பிரபாகரன் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். அத்துடன், தான் பணிபுரியும் அந்த நிறுவனத்தின் மேலே உள்ள அறையில் அவர் தங்கி வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று இரவு தனது பணியை முடித்து விட்டு, உறங்கச் சென்ற பிரபாகரனை, இன்று காலை அவருடன் பணி புரியும் தெய்வமணி என்பவர் பணிக்குச் செல்ல எழுப்புவதற்காகச் சென்று உள்ளார். அப்போது, பிரபாகரன், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதைக் கண்டு, அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், பதறிப்போன அவர், தனது நிறுவனத்தின் மேலாளருக்கும், சக ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளார். அவர்கள் மூலமாக, அந்த பகுதியில் உள்ள  மதுரவாயல் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து விரைந்து வந்த மதுரவாயல் காவல் துறையினர், உயிரிழந்த பிரபாகரனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிரபாகரன் தங்கி இருந்த அறையில் ஓர் கடிதமும் சிக்கியது. 

அந்த கடிதத்தில், “நான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததேன் என்றும், அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டதாகவும், ஆனாலும் அந்தப் பெண்ணை என்னால் மறக்க முடியவில்லை” என்றும், குறிப்பிட்டு இருந்தார்.

அத்துடன் “அந்த பெண்ணை மறக்க முடியாத காரணத்தால், நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும்” அவர் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

முக்கியமாக, “என்னுடைய சாவிற்கு வேறு யாரும் காரணம் இல்லை” என்றும், அவர் குறிப்பிட்டு இருந்தார்.

குறிப்பாக, “அம்மா, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு தாயாக வர வேண்டும்” என்றும், பிரபாகரன் மிகவும் உருக்கமாக எழுதியிருந்தார்.

இவற்றுடன், “உங்கள் இருவரையும் கடைசிக் காலம் வரை இருந்து கவனித்துக்கொள்ள முடியாத பாவி ஆகிவிட்டேன். அம்மா, என்னை மன்னித்து விடுங்கள்” என்று, அந்த கடிதத்தை உயிரிழந்த பிரபாகரன் மிகவும் உருக்கமாகத் தனது அம்மா - அப்பாவுக்கு எழுதியிருந்தார்.

இதனையடுத்து, இந்த கடிதத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர், தற்கொலை குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக, பிரபாகரன் காதலித்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதே போல், பிரபாகரன் உடன் பணியாற்றிய சக ஊழியர்களிடமும், பிரபாகரனின் நெருங்கிய நண்பர்களிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து பிரபாகரன் உடையதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.