அரியலூர் மாவட்டம், இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை, என்பவர் பா.ம.க., பெரம்பலூர் மாவட்ட செயலராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த சாமிநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், அரியலூர் மாவட்ட செயலராக உள்ளார். 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தீபாவளியன்று இரவு 9:00 மணியளவில், பட்டாசு வெடித்தபோது கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. முதலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் ஒருவர் மீது ஒருவர் உருட்டு கட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில், அங்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். 

அப்போது, துரைமுருகன் என்ற காவலர் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து போலீசார், அவரை மீட்டு, செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக, பா.ம.க., மாவட்ட செயலர் சாமிதுரை, ஒன்றிய செயலர் ராஜா உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதன்பின் பா.ம.க., மாநில துணை பொது செயலர் திருமாவளவன் தலைமையில், நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில், நூற்றுக்கணக்கானோர் செந்துறை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். திருச்சி சரக டி.ஐ.ஜி., ஆனி விஜயா சென்று விசாரணை நடத்தினார். கைதான பா.ம.க., வினரை போலீசார் விடுவித்த பின், பா.ம.க., வினர் கலைந்து சென்றனர். இது குறித்த இரு தரப்பு புகார்படி, பா.ம.க., வை சேர்ந்த, 19 - 42 வயதுள்ள நான்கு பேர், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த, 24 - 45 வயதுள்ள நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

``கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட பாமக மாவட்ட செயலாளர் உலக.சாமிதுரை தலைமையிலான ரவுடி கும்பல். ரவுடி கும்பலுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கை பதிவு செய்த அரியலூர் மாவட்ட காவல்துறையை வன்மையாக கண்டிப்பதோடு மேற்படி பொய் வழக்கை  ரத்து செய்யவேண்டுமென்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டுமென்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளராக திரு. சாமிநாதன் அவர்கள் உள்ளார். சுமார் 7 மாதங்களுக்கு முன்னதாக விபத்தொன்றில் சிக்கிய சாமிநாதன், முதுகெலும்பு முழுவதுமாக பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் இருந்தபடி மருந்து மாத்திரைகள் சாப்பிட்டபடி உள்ளார்.

கழிவறைக்கு செல்லுதல், குளித்தல் உள்ளிட்டஅன்றாடத் தேவைகளை செய்வதற்கே அவருக்கு குறைந்தபட்சம் 2 பேர் உதவி தேவைப்படும் நிலையிலும் உள்ளார்.

நிலைமை இப்படி இருக்கையில், தீபாவளி அன்று, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் உலக சாமிதுரை தலைமையில் 10க்கு மேற்பட்ட வாகனங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சாமிநாதன் வீட்டுக்கு வந்தனர். அடையாளம் தெரிந்தவரையில் அவர்கள் உலக சாமிதுரை; திலீபன், த/பெ.சாமிதுரை; தீனதயாளன், த/பெ.சாமிதுரை; சிலம்பரசன், த/பெ.சிவப்பிரகாசம்; லால், த/பெ.ஆத்மநாதன்; கதிரவன், த/பெ.குருசாமி; கோபி; ராஜா; சுகன், த/பெ குணசேகரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோராவர். 

அவர்களின் கைகளில் இருந்தவை வீச்சரிவாள், உருட்டுக்கட்டை, இரும்பு பைப் உள்ளிட்ட கொலைக் கருவிகளாகும். அந்த ஆயுதங்களைக் கொண்டு மாவட்டச் செயலாளர் சாமிநாதனையும் அவரது உறவினரும் மாநில இளைஞரணி துணை செயலாளர் பகுத்தறிவு அவர்களையும் கட்சியினரையும் வீட்டில் இருந்த சாமிநாதனின் தாயார், மனைவி மற்றும் சகலையையும் சரமாரியாகத் தாக்கினர். அதனைத் தடுக்க வந்த பகுத்தறிவு அவர்களின் கர்ப்பிணி மனைவியையும் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கினர். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் சாமிநாதனின் ஸ்கார்பியோ கார் மற்றும் பகுத்தறிவு அவர்களின் காரும் வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த கொலை முயற்சி சம்பவத்தை புகாராக அளிக்கும்படி காவல்துறை துணை கண்காணிப்பாளரும் காவல்துறை ஆய்வாளரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க மற்றுமொரு ஸ்கார்பியோ வாகனத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு.ராஜா அவர்களும் சாமிநாதனின் அக்கா திருமதி.சரஸ்வதி. அவர்களும் செந்துறை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றனர். அப்போது அங்கே காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர் மற்றும் நூற்றுக்கணக்கான காவலர்கள் முன்னிலையிலேயே அவர்கள் சென்ற வாகனத்தை மேற்படி சாமிதுரை தலைமையிலான ரவுடிக் கும்பல் அடித்து நொறுக்கி கொலை மிரட்டலும் விடுத்தனர்,

காவல் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. கொலை முயற்சியில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் உலக சாமிதுரை உள்ளிட்ட சிலரை  காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அங்கு திரண்ட                       100 க்கும் மேற்பட்ட பாமகவினர்  கைது செய்யப்பட்ட உலக சாமிதுரை உள்ளிட்டவர்களை விடுவித்து அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் புகைப்படங்களாகவும் காணொளியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது; செய்தியாகவும் வெளிவந்துள்ளது. முன்னரே திட்டமிட்டு குடித்துவிட்டு வந்து இத்தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யாமலும் இத்தாக்குதல் சம்பவம்  குறித்து புகார் அளிக்கச் சென்றவர்களின் வாகனத்தை அடித்து நொறுக்கி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமலும் பாதிக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீதே எதிர் தரப்பினரிடம் இருந்து பொய் புகாரைப் பெற்று சாமிநாதன் மீதும் அவரது கட்சியினர் மற்றும் பகுத்தறிவு உள்ளிட்டோர் மீதும்  சாமிந்தனின் குடும்பத்தினர் மீதும் பொய் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உலக சாமிதுரை கும்பல் அளித்த பொய்ப்புகாரின் பேரில் போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்றும் சாமிநாதனையும் அவரது குடும்பத்தினரையும் பகுத்தறிவு அவர்களின் குடும்பத்தினரையும்  பாமக வினர் கொலை செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் தொடர்ச்சியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்; எனவே காவல்துறை அவர்ளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென்றும் உயர்திரு.காவல்துறை இயக்குனர் அவர்களுக்கு சாமிநாதன் புகார் அளித்துள்ளார். அத்தோடு, சேதமடைந்த  வாகனங்களின் புகைப்படத்தையும் உயர்திரு.காவல்துறை இயக்குனர் அவர்களின் மேலான பார்வைக்கு அப்புகாருடன் இணைத்து அனுப்பியுள்ளார் சாமிநாதன்.

உலக சாமிதுரை தலைமையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த பாமகவினர் கொலைக்கருவிகளால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சாமிநாதன், அவர் மனைவி, தாயார், சகலை, அவரது உறவினரும் மாநில இளைஞரணி துணை செயலாளர் பகுத்தறிவு, அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் கட்சியினரைத் தாக்கினர்; பகுத்தறிவு அவர்களின் கர்ப்பிணி மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; இத்தாக்குதலில் சாமிநாதனின் 3 வாகனங்கள், வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் பகுத்தறிவு அவர்கள் கார் ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன!

இது தொடர்பாக சாமிநாதனின் அக்கா சரஸ்வதி அவர்களும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராஜா அவர்களும் செந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வாகனத்தில் சென்றபோது, அந்த வாகனத்தையும் மேற்படி உலக  சாமிதுரை தலைமையிலான பாமகவினர், காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் முன்னிலையிலேயே அடித்து நொறுக்கி, கொலை மிரட்டலும் விடுத்தனர்!

எனவே திட்டமிட்டு வந்து கொலை முயற்சியில் ஈடுபட்டதோடு, வாகனங்கள், சொத்துக்களைச் சேதப்படுத்திய பாம் உலக சாமிதுரை மீதும் அவருடன் வந்த பாமகவினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் உயர்திரு. காவல் துறை இயக்குனர் அவர்களையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!"

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.