“நான் சாகப்போகிறேன்” என்று சொல்லி, மனைவி மீது கேஸ் வெடிக்க வைத்து கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கோயம்புத்தூரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோயம்புத்தூர் சூலூர் ராவுத்தர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன், தனது மனைவி அமுதா உடன் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகளும் உள்ளனர்.

தாமோதரன், அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். போதிய வருமானம் இல்லாத காரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்திருக்கிறது. இந்த கருத்து வேறுபாடு சண்டையானது இப்படியே பல நாட்களாகத் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது.

இப்படியே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்ததால், பொறுத்துப் பொறுத்து பார்த்த அவர் மனைவி அமுதா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்று உள்ளார்.

மனைவி சண்டை போட்டுப் பிரிந்து போனதால், தனிமையில் வீட்டில் இருந்த கணவன் தாமோதரன், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

இதனால், கடந்த 2 நாட்களாக வீட்டில் தனிமையிலேயே தவித்து வந்த தாமோதரன், என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று, “நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்” என்று, தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி அமுதா, தனது பிள்ளைகளைத் தனது தாயாரின் வீட்டிலேயே விட்டுவிட்டு கணவனைத் தனியாக வந்து பார்த்து உள்ளார். அப்போது, வீட்டில் இருந்து கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு மனைவியை மிரட்டி உள்ளார். 

அப்படி, தாமோதரன் தனது மனைவியை மிரட்டிக்கொண்டு இருக்கும் போதே, திடீரென அந்த சிலிண்டர் தீப்பிடித்து உள்ளது. 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து தாமோதரனையும் அவரது மனைவியையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

அத்துடன், வீட்டில் தீ பற்றியது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

அதன் படி, தீயணைப்புத் துறையினர் விரைந்து உள்ளனர். ஆனால் தீயணைப்ப துறையினர் வருவதற்குள் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து மேலும், தீ பற்றி உள்ளது. 

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்,  அங்குள்ளவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கணவனே கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து மனைவியை கொலை செய்ய முயன்றதாக அங்கிருந்தவர்கள் சிலர் கூறியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, தாமோதரனை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.