தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

தமிழக சட்டப் பேரவை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

அதன் படி, கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்து உள்ளன.

அத்துடன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். 

அதன் தொடர்ச்சியாக, இன்று திமுக வின் தேர்தல் அறிக்கையை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் வைத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து திமுக வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பாக வெளியிட்டார். 

திமுக தேர்தல் அறிக்கையில், பொது மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

அதன் படி,

தமிழ் சார்ந்த திட்டங்கள்

- பொங்கல் மாபெரும் பண்பாட்டு நாளாக கொண்டாடப்படும்.
- திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- தமிழகத்தில் 75 சதவீதம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க சட்டம் இயற்றப்படும் என்று, தமிழ் சார்ந்த அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் 

பெண்களுக்கான திட்டங்கள்

- ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
- பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும். டீசல் 4 ரூபாய் குறைக்கப்படும்.
- நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.
- மகளிருக்கு பேறுகால உதவித் தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- அரசு பெண் ஊழியர் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு.
- நியாய விலை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இல்லத்தரசிகளைக் குறிவைத்து பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

கல்வி திட்டங்கள்

-  நீட் தேர்வு ரத்து தொடர்பாக முதல் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.
- கல்வி நிறுவனங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
- முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
- லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 
- 5 ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
- கல்வி நிறுவனங்களில் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
- பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்றும், கல்வி சார்ந்தும் திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
 
பொதுவான திட்டங்கள்

- குடிசை இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாற்றப்படும்
- சென்னை உள்ளிட்ட நகரங்களில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும்.
- 15,000 சிறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன்
- போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000 வழங்கப்படும்.

- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
- அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.