முதல் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 17 வயது சிறுமியை, 2 வதாக ஒருவர் கடத்திச் சென்று திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சரவணம் பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். அந்த சிறுமியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், அவரது பெற்றோர், அந்த 15 வயது சிறுமியை அவரது பெற்றோர், திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வந்த தங்களது உறவினர் ஒருவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமி தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்ததோடு, தனது கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த நேரத்தில், சிறுமியின் உறவினர் ஒருவர், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அவருக்கு உதவியாக சிறுமி, மருத்துவமனையில் தங்கி பார்த்துக்கொண்டு வந்தார். அந்த நேரத்தில், அதே மருத்துவமனையில் முத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சிவா என்பவர், விபத்தில் சிக்கிய நிலையில், படுகாயங்களுடன், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

அப்போது, அந்த திருமணம் ஆன சிறுமிக்கும், சிகிச்சை பெற்று வந்த சிவாவுக்கும் நல்ல அறிமுகம் ஏற்பட்டு, பழக்கமும் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கத்தில், அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மருத்துவமனையை விட்டு அவர்கள் இருவரும் வீடு திரும்பிய பிறகும், அவர்கள் இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி தங்களது பழக்க வழக்கத்தை மேலும் மேலும் நெருக்கமாக்கிக்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக, அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி, அந்த சிறுமி தன் கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அடிக்கடி வெளியே சென்று வந்தது, ஒரு கட்டத்தில் இந்த விவகாரம், சிறுமியின் கணவருக்குத் தெரிய வந்தது. இதனால், கோபப்பட்ட சிறுமியின் கணவர், சிறுமியை கண்டித்து உள்ளார். இதன் காரணமாக, சிறுமி திண்டுக்கல்லில் இருந்து கோவை சரவணம்பட்டி பகுதியில் இருக்கம் தனது பெற்றோரின் வீட்டிற்கு கோபித்துக்கொண்டு வந்து விட்டார். சிறுமி, கடந்த சில மாதங்களாகத் தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், திடீரென்று பெற்றோர் வீட்டில் இருந்தும் மாயமாகி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அந்த பகுதியில் பல இடங்களில் தேடிப் பார்த்து விட்டு, தங்களது மருமகனுக்கு போன் செய்து, “என் மகள் அங்கு வந்திருக்கிறாளா?” என்று கேட்டு இருக்கிறார்கள். ஆனால், அவரும் “இங்கு அவள் வரவில்லை” என்று கூறி உள்ளார். 

அத்துடன், “உங்கள் மகளுக்கு லாரி ஓட்டுனர் சிவா உடன் பழக்கம் இருக்கிறது என்றும், அது பற்றி கண்டித்த பிறகு தான், உங்கள் மகள் என்னிடம் சண்டை போட்டு விட்டு, உங்கள் வீட்டிற்கு வந்தார்” என்றும், கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள சரவணம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர், தனிப்படை அமைத்து சிறுமியை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுமி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த மஞ்சூர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற தனிப்படை காவல் துறையினர், சிறுமியை பத்திரமாக மீட்டனர். சிறுமியை கடத்திச் சென்ற லாரி ஓட்டுனர் சிவாவையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். 

மேலும், சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியை முதல் திருமணம் செய்த போது, அவருக்கு 15 வயது என்பது தெரிய வந்தது. அத்துடன், சிறுமிக்கு தற்போது 17 வயது மட்டுமே நடப்பதால், சிறுமியை திருமணம் செய்த முதல் கணவனையும் போலீசார் கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமிக்கு 15 வயதில் திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர் மற்றும் கணவர், கணவரின் தாய் ஆகியோர் மீதும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

குறிப்பாக, சிறுமியை முதலில் திருமணம் செய்த வெல்டிங் தொழிலாளி மற்றும் சிறுமியை தற்போது கொடைக்கானல் அழைத்துச் சென்று 2 வது திருமணம் செய்த டிரைவர் சிவா ஆகிய இருவரையும் ராமநாதபுரம் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.