சென்னையில் மனைவியின் ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு, உல்லாசமாக இருக்கலாம் என விளம்பரப்படுத்திய கணவனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த 46 வயதான சாமுவேல் திவாகர் என்பவர், சென்னையில் பணிபுரியும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான பெண் ஒருவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மனைவிக்கு சென்னையில் பணி என்பதால், கணவனும் சென்னைக்கு குடிபெயர்ந்து மனைவியுடன் வசித்து வந்தார்.

திருமணத்திற்குப் பிறகு, அவர்களுக்குள் ஒரு ஆண்டு கூட மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. அதற்குள், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வந்துள்ளது. இதனால், அன்றாடம் கணவன் - மனைவிக்குள் சண்டை நடந்துகொண்டே இருந்துள்ளது. 

கணவன் - மனைவிக்குள் சண்டை உச்சம் பெற்ற நிலையில், கடும் ஆத்திரமடைந்த கணவன், தன் மனைவியின் ஆபாசப் படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு, அதில் “உல்லாசமாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டு, அவரது செல்போன் எண்ணையும் வெளியிட்டு விளம்பரப்படுத்தி இருக்கிறார்.

கணவன் இணைய தளத்தில் விளம்பரப்படுத்திய பிறகு, அந்த பெண்ணிற்கு தொலைப்பேசி அழைப்பு வந்திருக்கிறது. மறுமுனையில் பேசிய திருச்சியைச் சேர்ந்த ஆண் ஒருவர், சாமுவேல் திவாகர் மனைவியிடம் ஆபாசமாகப் பேசி அழைத்திருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி கடுமையாகத் திட்டி போனை துண்டித்து உள்ளார்.

அதன் பிறகு, அந்த நபர் குறிப்பிட்ட இணையதள பக்கத்தில் சென்று பார்த்து உள்ளார். அப்போது, அந்த பெண் குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் அதனை ஆபாசமாகப் படம் எடுத்த அவரது கணவன், அந்த படங்களை “இணையதளத்தில் வெளியிட்டு உல்லாசமாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டு, தொலைப்பேசி எண்ணையும் வெளியிட்டு இருந்தது தெரிய வந்தது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன் கணவன் மீது, சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவில் கடந்த 2007 ஆம் ஆண்டு புகார் அளித்தார். 

இது குறித்து சென்னை சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11 வது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ராஜாகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 12 பேர் சாட்சியம் அளித்தனர். 

அதே நேரத்தில், கணவர் சாமுவேல் திவாகருடன் அவரது மனைவி இந்த இடைப்பட்ட காலத்தில் விவாகரத்து வாங்கி விட்டதால், இந்த வழக்கில் ஆஜராக விரும்பவில்லை என்று, அந்த பெண் என்ஜினீயர் கூறிவிட்டார்.

இதனால், அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி இந்த வழக்கில் ஆஜராகி, “67 ஐ.டி. சட்டப்படி ஆபாசப் படத்தைக் காட்டி உணர்வுகளைத் தூண்டும் வகையில் இருந்ததால் அது தண்டனைக்குரிய குற்றம் என்றும், தனது புகார்தாரர் சாட்சியம் அளிக்கவில்லை என்றாலும், அந்த படங்கள் உண்மையானவை என்றும், இதன் அடிப்படையில் குற்றவாளிக்கு உரியத் தண்டனை வழங்க வேண்டும்” என்றும், தன்னிடம் இருந்து ஆவணங்களைக் காட்டி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜாகுமார், “பெண்கள் வன்கொடுமை, பெண்ணை ஆபாசமாகச் சித்தரித்தல், 67 ஐ.டி. சட்டம் ஆகிய பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சாமுவேல் திவாகருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து” தீர்ப்பு வழங்கினார். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.