கடந்த வாரம் கொரோனா தொற்று காரணமாக நடிகை தமன்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது இதுகுறித்து விளக்கி பதிவு ஒன்றை செய்துள்ளார் நடிகை தமன்னா.  

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் காரணமாக நடிகை தமன்னாவின் பெற்றோர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து நடிகை தமன்னா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். என் பெற்றோருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. பரிசோதனை செய்தோம். என் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என்று கூறி இருந்தார். தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக நடிகை தமன்னா ஐதராபாத் வந்தார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

இதுபற்றி நடிகை தமன்னா எதுவும் கூறாமல் இருந்தார். இப்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும் எனது டீமும் பாதுகாப்பாக இருந்தும் எதிர்பாராத விதமாக எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்தேன்.

அதில் எனக்கு பாசிட்டிவ் என வந்தது. இதனால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தேன். மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்தேன். இப்போது குணமானதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன். இந்த வாரம் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன். உலகம் முழுவதும் பலரை கடுமையாகத் துன்புறுத்தும் இந்த தொற்றில் இருந்து நான் முழுமையாக மீண்டு விடுவேன் என்று நம்புகிறேன். இவ்வாறு தமன்னா கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

நாடு முழுக்க கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. 

தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பேச்சாக தான் உள்ளது. 

மீண்டும் ஷூட்டிங்கை துவங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்த நிலையில் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஷூட்டிங்ஸ்பாட்டில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் போதிலும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் தான் தமன்னாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார் தமன்னா. 

கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும், இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை தகர்த்தாலும், இந்த வைரஸ் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு இயல்பு நிலை.