சாத்தான்குளம் - ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவங்களால் காவல் துறையில் சீர்திருத்தங்கள் அவசியம் தேவை என்று பல்வேறு துறை நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், போலீசார் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதே போல், ஆந்திராவிலும் லாக்கப் டெத் சம்பவங்கள் நடைபெற்று, அந்த மாநிலத்திலும் போலீசார் மீது கடும் விமர்சனஙள் முன் வைக்கப்பட்டன.

அதே போல், நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் போலீசாரின் செயல்பாடு விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது ஹத்ராஸ் இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் பலியான சம்பவத்திலும் போலீசாரின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால், காவல் துறையின் செயல்பாட்டின் குறைபாடுகளை இந்தியா முழுவதும் தற்போது பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கின்றன. 

இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள காவல் துறையில் அவசரமாக சில அதிரடியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, வலியுறுத்தும் குரல்கள் காலத்தின் அவசியத் தேவையாக எதிரொலிக்கின்றன.

அத்துடன், காவல் துறையில் நாம் உடனடியாக சீர்திருத்தங்கள் எடுக்கத் தாமதப்படுத்தினால், நாட்டில் உள்ள அப்பாவிகள் பலரும் இதற்கு பலியாவது இன்னும் அதிகரித்துக் காணப்படும் என்ற அபாய குரல்களும் தற்போது ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, சமூகவியல் நிபுணர் ரமேஷ் விர்மனி இது தொடர்பாக பேசும் போது, “சாத்தான்குளம், ஹத்ராஸ் சம்பவங்களைத் தவிர, நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்திலும் நிறையக் கேள்விகள் எழுந்திருப்பதாக” குறிப்பிட்டார்.

“நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலைதான் செய்து கொண்டார் என்பதை எய்ம்ஸ் அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால், தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணை, உள் நோக்கம் கொண்டதாக அமைகிறது. நடிகை ரியா மீது போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் சந்தேகத்தை எழுப்புகிறது” என்று, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதே போல், “ஹத்ராஸ் இளம் பெண் விவகாரத்தில், போலீசார் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டனத்துக்கு உரியது என்றும், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட போலீசாரை இடைநீக்கம் செய்ததால், போலீசாரின் தவறை மாநில அரசு ஒப்புக்கொண்டதாகத் தோன்றுகிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“அதே நேரத்தில், இந்த நடவடிக்கைகள் ஹத்ராஸ் சம்பவம் மீண்டும் நடப்பதைத் தடுக்குமா?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், “இவையெல்லாம் காவல் துறை கட்டமைப்பிலேயே உள்ள குறைபாடுகள். இவற்றைச் சரி செய்யக் காவல் துறை சீர்திருத்தங்கள் மிக அவசியம். அதற்கு காலியாக உள்ள காவல் துறை பணியிடங்களை நிரப்புவதும், காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளிப்பதும் மிக முக்கியம்” என்று, தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார். 

குறிப்பாக, “காவல் துறை மீதான நிர்வாகத்தின் பிடியைத் தளர்த்த உச்ச நீதிமன்றம் முயன்று வருகிறது என்றும், ஆனால் அதை அரசுகள் எதிர்த்து வருகின்றன என்றும், போலீசார் நியமனத்திலும், இடமாற்றத்திலும் நியாயத்தைக் கடைப்பிடித்தால் தான், குற்றவியல் நீதி நடைமுறையைச் சரிசெய்ய முடியும்” என்றும்,  சமூகவியல் நிபுணர் ரமேஷ் விர்மனி தெரிவித்துள்ளார்.