பாலிவுட் திரை வட்டாரத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் சஞ்சய் தத். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அது இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டது. மும்பையில் தன்னுடைய முதல்கட்ட சிகிச்சையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுபற்றி, மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் இரண்டு நாட்களில் திரும்பி விடுவேன் என்றும் சஞ்சய் தத் கூறியிருந்தார். அவர் உடல் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்திருந்தது. அதன்படி இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். வீட்டிற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின் ட்விட்டரில் திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், எனது மருத்துவ சிகிச்சைக்காக நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டிருக்கிறேன். கவலைப்பட வேண்டாம், உங்கள் அன்பாலும் வாழ்த்துகளாலும் விரைவில் திரும்புவேன் என்று கூறி இருந்தார். இந்த செய்தி பெரும் பரபரப்பானது.

அவர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு என்ன பிரச்னை என்று கேட்டு வந்தனர். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதுபற்றி அவரோ, அவர் குடும்பத்தினரோ எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அதற்கான சிகிச்சை மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்குத் தொடங்கப்பட்டது. இதற்கிடையே, சஞ்சய் தத் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவரது மனைவி மான்யதா தத், மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் துபாயில் இருக்கும் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக நடிகர் சஞ்சய் தத் அங்கு சென்றிருந்தார். அதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின. இப்போது மருத்துவத்துறையை சேர்ந்த ஒரு ரசிகை, நடிகர் சஞ்சய் தத்துடன் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் சஞ்சய் தத் எடை குறைந்து, ஒல்லியாக இருப்பது தான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம் ஆகும். இதையடுத்து அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். சஞ்சய் தத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சதக் 2. யஷின் கே.ஜி.எப். 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார் சஞ்சய் தத். ரன்பிர் கபூர், வாணி கபூர் உள்ளிட்டோரை வைத்து யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஷம்ஷேரா படத்திலும் நடிக்கிறார் சஞ்சய் தத்.

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகியோர் புற்றுநோயால் இந்த ஆண்டு உயிரிழந்தார்கள். இந்நிலையில் சஞ்சய் தத் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, தினமும் ஒர்க்அவுட் செய்யும் பாலிவுட்காரர்களுக்கு ஏன் அதிக அளவில் புற்றுநோய் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.