வங்கக்கடலில் நாளை புரேவி புயல் உருவாகிறது. இலங்கையை கடந்து குமரிக்கடல் பகுதியில் நிலை கொள்ளும் இந்த புயலால் தென் தமிழகத்திலும் வட மாவட்டங்களில் திருவள்ளூர் , காஞ்சிபுரத்தில் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகம், தெற்கு கேரளா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானி்லை மையம் தெரிவித்துள்ளது. 

டிசம்பர் 2,3,4ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கியது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த வாரம் நிவர் புயல் கரையை கடந்தது. புயலினால் தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள்,நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறும் என இந்தியவானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2 முதல் கனமழை வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் டிசம்பர் 2,3,4ஆம் தேதிகளில் மிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது:

``தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும்.

காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டிச.2ல் தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

டிச.3ந்தேதியும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை நகர், புறநகரில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 3ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது"

இவ்வாறு அவர் கூறினார்

மேலும், டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் வலுவடையயும் நிலையில், அதன் காரணமாக டிசம்பர் 3ஆம் தேதி வட தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிக அதிக கனமழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறப்படுகிறது.