நடிகை குஷ்பு கலந்துகொண்ட பாஜக விழாவில், மகளிர் அணி நிர்வாகி மண்டை உடைக்கப்பட்டதால், குஷ்பு பதறிப்போனார். 

திருச்சி அருகே நடைபெற்ற பாஜக விழாவில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருச்சி மாவட்டம் வயலூர் அடுத்து உள்ள எட்டரைக் கோப்பு கிராமத்தில் பாஜக சார்பில் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்திற்குத் தமிழகத்தின் பிரபல நடிகையும், சமீபத்தில் புதிதாக பாஜகவில் சேர்ந்தவருமான குஷ்பு கலந்து கொண்டார். 

அப்போது, நடிகை குஷ்புவைக் காண அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கூடினார்கள். கூட்டம் மிக அதிக அளவில் காணப்பட்டதால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பெரும் முயற்சிகள் எடுத்தனர்.

இதனால், போலீசார் பொது மக்களிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதாவது, பொது மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அந்த பகுதியைச் சேர்ந்த காவல் துறையின் சில நடவடிக்கைகளை எடுத்தனர். இதனால், பாஜக மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

அத்துடன், மகளிர் அணி நிர்வாகி மண்டை உடை அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மற்ற பாஜக நிர்வாகிகள், உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு முதலுதவி அளித்தனர். இது தொடர்பான தகவலானது மேடையில் இருந்த நடிகை குஷ்புவிடம் கூறப்பட்டது.

இதனால், பதறிப் போன நடிகை குஷ்பு, அப்பெண்ணைத் தேடி வந்து நலம் விசாரித்தார். அப்போது, நடிகை குஷ்புவிடம் “காவல் துறையினர் என்னை தள்ளி விட்டதால் தான், நான் கீழே விழுந்தேன் என்றும், அதனால் தான் எனக்கு காயம் ஏற்பட்டது” என்றும், அந்தப் பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடிகை குஷ்பு, ஆறுதல் கூறினார். அதன் பிறகு, நடிகை குஷ்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

இதனிடையே, நடிகை குஷ்பு கலந்துகொண்ட விழாவில், மகளிர் அணி நிர்வாகி ஒருவருக்கு மண்டை உடைந்த சம்பவம், அப்பகுதியிலும், பாஜகவினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதே போல், தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக, திருநெல்வேலியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் பண்டிகை விழாவில் சொதப்பல்கள் நிறைய நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு பாஜக சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு "நம்ம ஊர் பொங்கல்" என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் இந்தப் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்ட பாஜக சார்பில் பாளையங்கோட்டை ராமர் கோவில் திடலில் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அங்கு தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால், பொங்கல் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட அனைத்து பானைகளும், பனை ஓலைகளும் தண்ணீரில் நனைந்து வீணாகிப் போனது. மழை பெய்து வருவதை நன்கு அறிந்தும் கூட நிகழ்ச்சிக்கு உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட பாஜகவினர் செய்ய தவறியதாகவும் கூறப்பட்டது.

குறிப்பாக மேடையில் கூட பந்தல் அமைக்காததால் மழையால் எங்கு பார்த்தாலும் சேறும் சகதியாக காட்சியளித்தது. இதனால், மண்டபத்திற்கு விழா மாற்றப்பட்டு, அதன் பிறகு பந்தல் போடப்பட்டு அவசர அவருமாக பொஙகல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.