பாஜக வினர் அத்துமீறி பள்ளிவாசல் முன்பு ஒலிபெருக்கி கட்டியதால் பிரச்சனை வெடித்த நிலையில், பாஜக அலுவலகம் முற்றிலுமாக சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழ்நாட்டில் தற்போது பொங்கல் விழா களைகட்டி உள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சியினர் தங்களது கட்சி சார்பில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கி உள்ளனர். 

அதன் படி, மதுரை திருப்பாலை பகுதியில் பாஜக சார்பில், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாஜக தமிழ் மாநில தலைவர் எல்.முருகன், மதுரை வருகை தந்தார். 

அவரை வித்தியாசமாக வரவேற்கும் விதமாக மதுரை பாஜக நிர்வாகிகள், மாட்டு வண்டியில் அழைத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். இதனால், அந்த பகுதியே விழா கோலம் போல் காட்சி அளித்தது.

அதன் தொடர்ச்சியாக, அந்த பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில், எல்.முருகன் மக்களோடு மக்களாக நின்று பொங்கல் வைத்தார்.

இதனையடுத்து, மதுரை திருப்பாலை பெரியார் நகர் பகுதிக்கு எல்.முருகன் வருகை தந்தார். அப்போது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் சேர்ந்தவர்கள் எல்.முருகனுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் அப்படியே, அங்குள்ள சாலையில் அமர்ந்து திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இது தொடர்பாக பேசிய போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர், “பாஜக வினர் அத்துமீறி இங்குள்ள பள்ளிவாசல் முன்பாக ஒலிபெருக்கி கட்டியதாகவும், அதனைத் தட்டி கேட்ட போது, அவர்கள் வரம்பு மீறி பிரச்சினையில் ஈடுபட்டதாகவும்” பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். 

இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் 
ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், போலீசாரின் சமரசத்தை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், இரு தரப்பினரும் கீழே கிடந்த கல் மற்றும் காலணிகளைத் தூக்கி வீசி மோதிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியமாக, கல் மற்றும் காலணிகளைத் தூக்கி வீசி மோதிக்கொண்டதால் இன்னும் ஆத்திரமடைந்தவர்கள் மதுரை மேலமடை பகுதியில் உள்ள பாஜக புறநகர் மாவட்ட அலுவலகத்திற்குள் நேற்று மாலை புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து முற்றிலுமாக சேதப்படுத்தினர். இப்படியாக அராஜகத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து முழுமையான தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

எனினும், இந்த சம்பவத்தைக் கண்டித்து பாஜக வினரும் திடீரென்று அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் அவர்களுடன் சமாதானம் பேசி போராட்டத்தைக் கைவிட வைத்தனர்.

இதன் காரணமாக, காலையில் நடந்த கல் மற்றும் காலணிகளைத் தூக்கி வீசி மோதல் தொடர்பாகவும், மாலையில் பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டதா? என்பது தொடர்பாகவும் போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.