சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மேகாலயாவில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது, தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் தமிழக மக்கள் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்து உள்ளனர். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இதனால், முன் எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல் - டீசல் விலை தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழகம் உட்பட அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி நேற்றைய தினம் 2 வது நாளாக, அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறிப்பாக, “மாநில அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காவிட்டால் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். 

இப்படியான சூழ்நிலையில் தான் இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா, தனது சக அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் நேற்று அவசரமாக ஆலோசனை மேற்கொண்டார். 

இதில் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், பெட்ரோல் - டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியைக் குறைக்க அரசு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாகவே, அந்த மாநிலத்தில் பெட்ரோல் - டீசல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் அதிரடியாக இன்று குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விலைகுறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

ஆனால், சென்னையில் பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்து காணப்படுகிறது.

அதன் படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் இன்றைய தினம் அதிகரித்து, ரூ.91.68 காசுக்கு விற்பனையாகிறது.

டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 85.01 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போல், கடலூரில் பெட்ரோல் லிட்டர் 93.40 காசுக்கும், டீசல் ரூ.86.66 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேகாலயாவில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் 
அதிகரிக்கப்பட்டுள்ளது, தமிழக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேலும், “மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் - டீசல் மீதான வரிகளைக் குறைக்காமல், மக்கள் மீது சுமையை ஏற்றுவதில் போட்டிப் போட்டு வருவதாக” மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், “மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளை விலையைத் தாறுமாறாக உயர்த்தி இருக்கிறது என்றும், பிப்ரவரி 4 ஆம் தேதி தான் சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்த்தப்பட்டது என்றும், ஆனால் தற்போது மீண்டும் நேற்று இரண்டாவது முறையாக ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.785 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது” என்றும், வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சீமானும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அதே போல், தமிழகத்தில் பொது மக்கள் பலரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, மத்திய அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.