தமிழகத்தில் ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு பரவி உள்ள நிலையில், ஒரு திமுக நிர்வாகி உயிரிழந்துள்ளார். இதனால், சக திமுக நிர்வாகிகள் பீதியடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவத் தொடங்கிய புதிதில், தமிழக மக்களிடையே பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனா வைரஸ் என்பது,  பணக்கார நோய் என்றும், அது ஏழை எளிய மக்களைப் பாதிக்காது” என்றும் கூறினார். ஆனால், அடுத்த சில நாட்களில், அனைத்து தரப்பு மக்களையும் கொரோனா பாதிக்கத் தொடங்கியது.

மேலும், தமிழகத்தில் கடந்த நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரத்தை நெருங்கிக் காணப்படும் நிலையில், சென்னை தாண்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், அதன் தாக்கம் தீவிரமாகப் பரவி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏறப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு திமுக நிர்வாகி உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த திமுக பேரூர் பகுதி செயலாளர் 56 வயதான ஜெயசந்திரன், ஏற்கனவே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டயாலிசிஸ் செய்து வந்தார்.

இதனையடுத்து, கடந்த 16 ஆம் தேதி உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு 
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. 

இதனையடுத்து, அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதேபோல், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழக அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கடந்த மாதம் சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். அதன் தொடர்ச்சியாக, திமுகவைச் சேர்ந்த ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு, செஞ்சி மஸ்தான், திட்டக்குடி எம்.எல்.ஏ. கணேசன் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியைச் சேர்ந்த பழனி, உளுந்தூர்பேட்டை தொகுதியைச் சேர்ந்த குமரகுரு, பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த சதன் பிரபாகர், கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த அம்மன் கே.அர்ஜூனன் ஆகியோரும் கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியிருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஒரே நாளில், கிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவன், ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. காந்தி, வேலூர் திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், அதிமுக தரப்பிலும் 8 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழக அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தற்போது கொரோனா பீதியில் உரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.