கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்சபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் வெட்டியபந்தி கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம், அங்குள்ள கோபால சமுத்திரத்தைச் சேர்ந்த தனது உறவினரான ராஜகுமாரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  ராஜகுமாரியை, சங்கரலிங்கம் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். தற்போது சங்கரலிங்கம் - ராஜகுமாரியை தம்பதியினருக்கு 2 ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே, சங்கரலிங்கம் - ராஜகுமாரியை இடையே, கடந்த 2 ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் கணவன் - மனைவி இருவருமே குடும்பத்தில் நிம்மதியின்றி காணப்பட்டுள்ளனர்.

சங்கரலிங்கம் கொத்தனாராக பணியாற்றி வரும் நிலையில், அதே பகுதியில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் பிசினஸ் செய்து வந்த என்.ஜி.ஓ. காலணியைச் சேர்ந்த மகாலட்சுமி உடன், அறிமுகம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில், நாளடைவில், இருவருக்குள்ளும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சங்கரலிங்கம் நெல்லை என்.ஜி.ஓ. காலணியில் உள்ள மகாலட்சுமி உடன், அவர் வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் சங்கரலிங்கத்தின் மனைவி ராஜகுமாரிக்கு தெரிய வந்த நிலையில், அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கணவரிடம் அவர் கேட்டபோது, இருவருக்குள்ளும் மீண்டும் சண்டை வந்துள்ளது. அப்போது, மனைவி ராஜகுமாரியை, சங்கரலிங்கம் தாக்கியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, சங்கரலிங்கம் மீது ராஜகுமாரியின் உறவினர்கள் நெல்லை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவன் - மனைவி இருவரையும் அழைத்துச் சமாதானப்படுத்தி, சேர்ந்து ஒன்றாக வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் அறிவுரையையும் மீறி சங்கரலிங்கம், மகாலட்சுமி உடனான தொடர்பை விடவில்லை என்றும் தெரிகிறது. தொடர்ந்து அவருடன் தங்கி சங்கரலிங்கம் குடும்பம் நடத்தி வந்துள்ளார். மீண்டும் இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே, கடந்த 15 ஆம் தேதி இரவு பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது, மனைவி ராஜகுமாரியை கணவன் சங்கரலிங்கம் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான   ராஜகுமாரி, 16 ஆம் தேதி அதிகாலையில் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த நெல்லை சிவந்திப்பட்டி போலீசார், ராஜகுமாரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாகச் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, மருத்துவமனையில் தரப்பட்ட பிரேதப் பரிசோதனையில், ராஜகுமாரி கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் தற்கொலை தான் செய்தார் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனால், அதிர்ச்சியடைந்த ராஜகுமாரியின் உறவினர்கள், சங்கரலிங்கம் தான் ராஜகுமாரியை அடித்துக்கொன்றார் என்றும், இதனால் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்,  மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சங்கரலிங்கம் மகாலட்சுமியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.

மேலும், சங்கரலிங்கம் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூட போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும், போலீசார் சங்கரலிங்கத்திற்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும், ராஜகுமாரியின் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளனர்.

குறிப்பாக, போலீசார் நேர்மையாக வழக்கை நடத்தி எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, ராஜகுமாரியின் உடலை வாங்க மாட்டோம் என்று, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கணவன் - மனைவி சண்டையில், மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவன் தன் காதலியுடன் சென்ற நிலையில், அவர்களது 3 குழந்தைகளும் தற்போது அனாதையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.