புதுச்சேரியில், அரசின் செலவினங்களுக்காகக் கடந்த மார்ச் மாதம் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இதற்கான அனுமதி காலம், தற்போது முடிந்ததையடுத்து முழு பட்ஜெட் அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின், 3 நாட்களுக்கு முன் மாநில பட்ஜெட்டுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ரூ.9,500 கோடிக்குத் தாக்கல் செய்கிறார். இதையொட்டி 18-ம் தேதி மதியம் 12 மணியளவில் சட்டசபை வளாகம் 4-மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்க இருந்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது. 

இதையடுத்து சட்ட சபையைக் கூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்குக் கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் உரையாற்றுவார். அதையடுத்து, நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் உரையைப் படித்துப் பார்க்கக் கூடுதல் நேர அவகாசம் வேண்டும் என்று தலைமைச் செயலாளர் மூலம் அரசுக்கு திடீரென தகவல் அனுப்பியதாகத் தெரிகிறது.

எனவே இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், இன்று காலை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், உரையைப் படித்துவிட்டு சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. 

மேலும், ஆளுநர் வரவில்லையென்றால், கூட்டத்தொடரை ஒத்திவைக்கவும், முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் சட்டசபை தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் ஆளுநர் கிரண்பேடிக்காக அனைவரும் காத்திருந்தனர். அதுவரை அவர் வராததால் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டசபையில் ஆளுநர் நிகழ்ந்த வேண்டிய உரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறிய சிவக்கொழுந்து சட்டசபையை ஒத்திவைத்தார்.

புதுச்சேரியில், 2021-ல், அதாவது அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை எளிமையாக எதிர்கொள்ள சில முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்பதால் இந்த பட்ஜெட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளுநர் உரை இல்லாமல் புதுச்சேரி சட்டசபை பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்வாரா எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- பெ.மதலை ஆரோன்