“பேய், என்னை சாக வா” என்று கூப்பிடுகிறது என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த சத்திரப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவர், தினமும் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். கோபிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இதில், மூத்த மகளான லத்திகா, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, லத்திகா தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடிய லத்திகா, அதன் பிறகு வீட்டில் யாரிடமும் சரியாகப் பேச வில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன், அந்த பிறந்த நாள் கொண்டாட்டம் முதல் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

குறிப்பாக, வீட்டில் உள்ள தனது பெற்றோர் மற்றும் தம்பி, தங்கைகளிடம் கூட லத்திகா சரிவரப் பேசாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, லத்திகா, நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில், வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில், லத்திகாவின் ரூம் வெகு நேரம் ஆகியும் திறக்கப்படாத நிலையில், சந்தேகம் அடைந்த அவரது தந்தை கோபி, கதவைத் தட்டி உள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. வெகு நேரமாகக் கதவைத் தட்டியும் அவர் திறக்காமல் இருந்ததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு, லத்திகா தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மற்றும் தங்கை, தம்பி உள்ளிட்டோர் கதறி அழுதுள்ளனர்.

மேலும், இது குறித்து வேடசந்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வேடசந்தூர் காவல் துறையினர் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், லத்திகா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், லத்திகாவின் அறையில், அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு அவர் பென்சிலால் எழுதிய கடிதம் கிடைத்தது.

அந்த கடிதத்தில், “அப்பா, அம்மா யாரோ என்னை பயமுறுத்துராங்க. அப்பா நைட்டான எனக்குத் தூக்கம் இல்லை. என்ன சாக வானு யாரோ கூப்பிடுறாங்க. இதை, வெளியே கூறினால் எல்லாரையும் கொன்றுவிடுவேன் என்று அந்த பேய் சொல்லுது. என்ன உடனே சாக கூப்பிடுது. என்னை உடனே ஏதாவது பண்ண சொல்லுதுபா. இல்லைனா, நம்ம குடும்பத்தையே அழிப்பேன்னு சொல்லுதுபா.

எனக்கு என்ன செய்யுரதுனே தெரியல. யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்கனு எனக்குத் தோனுது. என்னோட பொருள் நான் பயன்படுத்திய எதுவும் தயவு செய்து வீட்டில் இனி வைக்க வேண்டாம் அப்பா. எல்லாம் நன்மைக்கே. தம்பி.. தங்கச்சி, நீங்க தான் அப்பா அம்மாவை நல்லா இனிமேல் பாத்துக்கனும். லவ் யூ மை பேமிலி” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.

இதைப் படித்த போலீசார் மற்றும் லத்திகாவின் பெற்றோர் இன்னும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், லத்திகாவின் அறை மற்றும் அந்த வீட்டில் வேறு ஏதேனும் புதிதாகப் பொருட்கள் தென்படுகிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து, அந்த கடிதத்தைக் கைப்பற்றிய போலீசார், கடிதத்தில் எழுதி இருப்பதின் உண்மைத் தன்மை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், லத்திகா பயன்படுத்திய செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்து, அதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, “பேய், என்னை சாக வா” என்று கூப்பிடுகிறது என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.