காதலனால் ஏமாற்றப்பட்ட காதலி தற்கொலை செய்துகொண்டதால், மன உளைச்சலுக்கு ஆளான காதலனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் முதுநகர் அடுத்துள்ள பச்சையங்குப்பத்தைச் சேர்ந்தவர் 23 வயதான வினிதா, அந்த பகுதியில் உள்ள கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான திருவரசன் என்ற இளைஞனும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் நெருங்கிப் பழகி காதலித்து வந்த நிலையில், அங்குள்ள பல்வேறு பகுதிகளுக்குக் காதலர்களாக ஒன்றாகச் சேர்ந்த ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் காதலன் திருவரசன் வீட்டில் இந்த காதல் விசயம் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, திருவரசனுக்கு திருமணம் செய்து வைக்கப் பெண் பார்க்கும் படலாம் நடந்துள்ளது. அதன்படி, திருவரசனுக்கு வேறோரு பெண்ணை திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் முடிவு செய்திருந்தார். 

இதன் காரணமாக, தனது காதலி வனிதாவைப் பார்த்துப் பேசுவதை, திருவரசன் முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். ஆனால், வினிதா திருவரசனுடன் தொடர்ந்து பேச முற்பட்டுள்ளார். ஆனால், அது முடியாமல் போய் விட்டது.

ஒரு கட்டத்தில், இருவரும் தங்கள் காதல் தொடர்பாகச் சந்தித்துப் பேசும்போது, திருவரசன் வீட்டில் திருமணத்திற்குப் பெண் பார்த்து முடிவு செய்யப்பட்டதும் வனிதாவிற்குத் தெரிய வந்தது. இதனால், காதலர்கள் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காதலனால் தான் கழற்றிவிடப்பட்டதை உணர்ந்த வினிதா, கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் கடும் மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார். மன உளைச்சலின் உச்சத்திற்குச் சென்ற வினிதா, கடந்த 10 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். ஆனால், இது பற்றி வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.

அந்த எலி விஷம், வினிதாவை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுகொண்டு இருந்தது. அதன் படி, கடந்த 15 ஆம் தேதி வினிதாவுக்கு உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வினிதாவை அவரது பெற்றோர் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

அப்போது, தான் 5 நாட்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டதாகத் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால், வினிதாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து வினிதாவின் பெற்றோர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன் பிறகு, உயர் சிகிச்சைக்காக வினிதாவை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இது தொடர்பாகக் கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, வினிதாவின் காதலன் திருவரசனிடம் விசாரணை நடத்தியபோதுதான், தன் காதலி வினிதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த காதலன் திருவரசன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், பதறிப்போன திருவரசனின் பெற்றோர், அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, திருவரசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதனையடுத்து, உயர் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, காதலனால் ஏமாற்றப்பட்ட காதலி தற்கொலை செய்து கொண்டதால், மன உளைச்சலுக்கு ஆளான காதலனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.