கோவையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் செட்டி பாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான ரித்தீஷ், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே, பேரூர் தமிழ் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஐஸ்வர்யா என்ற இளம் பெண்ணை பார்த்து, அவரை ஒருதலை பட்சமாக ரித்தீஷ் காதல் வயப்பட்டுள்ளார்.

இதனால், ஐஸ்வர்யா செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்னாடியே ரித்தீஷ் சென்று காதல் தொல்லை தந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரித்தீஷ் தன் காதல் வளையில் ஐஸ்வர்யாவை வீழ்த்தி உள்ளார். அவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் கூறப்படுகிறது.

இருவரும் நெருங்கிக் காதலித்து வந்த நிலையில், ரித்தீஸின் செயல்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், மனசு மாறிய இளம் பெண் ஐஸ்வர்யா, ரித்தீஸை தவிர்த்து வந்துள்ளார். ஆனால், ரித்தீஸ் தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு காதல் தொல்லை தந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத ஐஸ்வர்யா, ரித்தீஸிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். 

இது தொடர்பாக ரித்தீஸ், ஐஸ்வர்யா பின்னாடி பல முறை சுற்றியும் அவர் எந்த பதிலும் சொல்லாத நிலையில், அவர் கடும் ஆத்திரமடைந்துள்ளார். 

இதனையடுத்து, நேற்று இரவு ஐஸ்வர்யா வீட்டிற்குச் சென்ற ரித்தீஷ், “என்னிடம் ஏன் பேசவில்லை?” என்றும், “என்னை மீண்டும் காதலிக்க வேண்டும்” என்றும், வற்புறுத்தி உள்ளார். ஆனால், “இதில் எனக்கு விருப்பம் இல்லை” என்று ஐஸ்வர்யா உறுதிப்படக் கூறி உள்ளார்.

அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரமடைந்த ரித்தீஸ், ஐஸ்வர்யாவை வெறித் தீர மாறி மாறி கத்தியால் குத்தி உள்ளார். 

ஐஸ்வர்யாவின் வயிற்றிலும், கையிலும் ரத்தம் சொட்டிக்கொண்டிருக்க, அவர் சத்தம் போட்டு அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேல், அவரின் அறையிற்கு ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது, ரித்தீஸ், ஐஸ்வர்யா மாறி மாறி தாக்கியும் கத்தியால் குத்திக்கொண்டும் இருந்துள்ளார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அநைட்த ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேல், அவனைத் தாக்க ஓடி உள்ளார். ஆனால், ரித்தீஸ் அவரையும் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இவர்கள் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து, இருவரையும் அவசர அவசரமாகக்  கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜஸ்வர்யா மட்டும் சிகிச்சை பலனின்றி தற்போது பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கொலையாளி ரித்தீஸை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

இதனிடையே, காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், கோவையில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.