வேலூர் மண்டல பொறுப்பாளர் ஞானதாஸ் தலைமையில், மண்டல நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


அக்கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், ’’ சாதி, மதம் கடந்து பழகக்கூடியவர் சரத்குமார். அவர் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தபோது, மசூதிகள், சர்ச்சுகள், மற்றும் கோயில்களில் பிரார்த்தனை நடத்திய பொது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். திருமணத்திற்கு முன்பு இருந்தே அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். 


சின்னத்திரை தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்ததால்தான் என்னால் முழு நேர அரசியலில் ஈடுபட முடியவில்லை. ஆனால் இனி வரும் காலங்களில் தலைவர் சரத்குமாருடன் சேர்ந்து கண்டிப்பாக அரசியலில் அதிகமாக ஈடுபட இருக்கிறேன்.


2021ஆம் ஆண்டு நல்லதொரு மாற்றத்தை உருவாக்க, ’எங்களுடைய நோக்கம் வெற்றி, எங்களுடைய நோக்கம் வளர்ச்சி’ என்று செயல்பட வேண்டும். ‘’ என்று பேசினார்.


பிறகு பேசிய நடிகர் சரத்குமார், ’’ 13 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தை நடத்துகிறோம் என்றால் அது சாதாரண விசயமில்லை.  ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நமது உடம்பில் ஓடும் ரத்தம் சிவப்பு என்பதை நாம் புரிந்துகொள்ளம் போது அங்கு சமத்துவம் வருகிறது. சமத்துவம் வரும் போது தான் நமது நாடும், வீடும், சமுதாயமும் சிறக்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.


ரசிகர்களாக இருந்து விடாதீர்கள் அரசியல்வாதிகளாக மாறுங்கள் என்பதை சொல்லத் தான் இந்த ஆலோசனை கூட்டம்.  ஒரு சீட்டில் இரண்டு சீட்டில் நிற்பேன் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன். எனக்கு கொடுக்கவில்லை என்று யார் சொன்னாலும் பரவாயில்லை. இந்த முடிவு யாரையும் எதிர்ப்பதற்கோ, கூட்டணி தர்மத்தை உடைப்பதற்கோ அல்ல, உங்களை உருவாக்கத்தான்.’ என்றார்.