சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ’’ பாஜகவிற்கு தமிழகத்தில் ஒரு எம்பி கூட இதுவரை இல்லை. இருப்பினும், தமிழகத்திற்கு எவ்வித குறையும் பாஜக காட்டவில்லை. பிரதமர் மோடி , தமிழகத்திற்கான தேவைகளை குறையின்றி நீக்கி வருகிறார்.

அதற்கு இந்த பட்ஜெட்டே உதாரணம், ஒவ்வொரு துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறைப் பட்டியலை எடுத்துப் பாருங்கள்,
ஒவ்வொரு துறைக்கு ஒவ்வொரு விதத்தில் மத்திய பட்ஜெட்டிலிருந்து நிதி உதவியை நீட்டித்து தான் உள்ளோம். தமிழகத்திற்கு பிரதமர் மோடிக்கு பல நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

எல்லாரும் நினைவிருக்கும், 2014ல் பிரதமர் பதவி ஏற்றவுடன், இலங்கையில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்று தவித்து வந்த 5 மீனவர்களை இலங்கை அரசிடம் பேசி, அவர்களை குடும்பத்துடன் சேர்த்தார் மோடி. 


பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது குறித்து எனக்கு தர்மசங்கடமாகத் தான் இருக்கிறது. என்ன நம்ம நாடு இப்படி இருக்கே என்று சொல்வதை நிறுத்தினால் தான் உருப்படுவோம். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வரி குறைப்பு குறித்து  ஆலோசிக்க வேண்டும். மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் தான் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடிவு செய்ய வேண்டும்.” என்றார்.