திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மனைவியை விவாகரத்து செய்ய பாஜக எம்.பி. முடிவு செய்துள்ளதாக வெளியாகும் சம்பவம், ஒட்டு மொத்த அரசியல் வட்டாரத்திலும் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும், மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில கட்சிகளைத் தாண்டி தன்னுடைய செல்வாக்கை செலுத்த முடியவில்லை. அங்கெல்லாம் அந்த மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான், பாஜக, காங்கிஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அரசியல் களத்தில் தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்பந்த்தில் இருக்கின்றன. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனி மெஜாரிட்டியில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, தனது செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் கட்சியை வளர்க்க முனைப்பு காட்டி வருகிறது. இதனால், பல மாநில கட்சிகள் பாஜகவிடம் அடக்கியே வாசிக்கின்றன.

இதே போலத்தான், மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் இடையே அதிக போட்டி நிலவுகிறது. 

அந்த மாநிலத்தில், சமீபத்தில் கூட திரிணாமூல் கட்சியிலுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் சிலர், பாஜக கட்சிக்கு மாறினார்கள். இதன் காரணமாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அங்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் தான், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி சவுமித்ரா கான் என்பவரின் மனைவி சுஜாதா மோண்டல் கான், இன்று காலை அதிரடியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத பாஜக எம்.பி. சவுமித்ரா கான், கடும் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவலை அறிந்த அந்த மாநிலத்தைச் சேர்ந்த மற்ற பாஜக நிர்வாகிகளும், திரிணாமூல் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த மற்ற நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாஜக எம்.பி. சவுமித்ரா கான், ஒரு உறுதியான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

அதன்படி, தனது மனைவி வேறு கட்சியில் இணைந்ததால் கடும் அதிருப்தியடைந்த அவர், தங்களது திருமண பந்தத்தை அரசியல் முடித்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார். 

அதாவது, தனது மனைவி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் கோபமடைந்த பாஜக எம்.பி, தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிஸ்னாபூர் தொகுதிக்குள் நுழைய சவுமித்ரா கானுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த போது, தனியாளாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தனது கணவருக்கு வெற்றியை தேடித் தந்தவர் சுஜாதா மோண்டல் கான். கணவரின் வெற்றிக்கு பாடு பட்ட போதிலும், அதற்கான பயன் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்று சுஜாதா மோண்டல் கான் தற்போது குற்றம்சாட்டி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த சவுமித்ரா கான், “அரசியலால் எங்களின் 10 ஆண்டு கால திருமணம் பந்தம் முறிந்து விட்டது” என்று, வேதனை தெரிவித்தார். 

“பாஜகவிற்காக நான் கடுமையாக உழைப்பேன். நான் ஒரு போதும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதில்லை” என்றும், திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

இதனையடுத்து, பிரபல ஆங்கில தொலைக்காட்சி பேட்டியளித்த சுஜாதா மோண்டல் கான், “அரசியல் வேறு, குடும்பம் வேறு. என் கணவர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ, அதை அவர் செய்யட்டும்” என்று, கூறினார். 

“ஆனால், ஒரு நாள் கண்டிப்பாக நான் செய்ததையும் அவர் உணர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கூட வரலாம்” என்றும், சுஜாதா மோண்டல் கான், தன் கணவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் மத்தியில் மட்டும் இல்லாது நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.