இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை  இன்னும் ஒரு வாரத்தில் (நவம்பர் 14), கொண்டாடப்பட உள்ள நிலையில், காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், வரும் தீபாவளி பண்டிகை உட்பட திருமண நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் பட்டாசு வெடிக்க மற்றும் அதனை சந்தைகளில் விற்பனை செய்ய முழுமையாக தடை விதிக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு தரப்பில்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம், கொரோனா பேரிடரால் ஏற்கனவே பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டிகைக் காலத்திலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கூறிவிட்டால் இன்னும் சிக்கல் ஏற்பட்டுவிடும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இருப்பினும், காற்று மாசுவை கட்டுப்படுத்த வேண்டும்  என நோக்கத்தில் ராஜஸ்தானை போலவே ஒடிசாவிலும் பட்டாசுக்கு தடை போடப்ப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை, நம் மாநில அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் படி, தீபாவளி அன்று காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்தாண்டு பட்டாசு வெடிக்கும் நேரம் எப்போது என்பதை அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே, பட்டாசு வெடிப்பதில் இந்த நடைமுறைதான் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்காமல், பிற நேரங்களில் வெடித்து சட்டத்தை மீறுபவர்களுக்கு சட்டப்படி தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடையை நீக்குமாறு, அந்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

``தமிழகத்தில் பட்டாசு உற்பத்தியில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என 8 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 
 
நாட்டில் பட்டாசு பயன்பாட்டில் 90 சதவீதம் உற்பத்தியை தமிழகம் கொண்டுள்ளது. காற்று மாசு, ஒலி மாசு விதிகளின் படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு பிரச்சினை ஏற்படாது. எனவே, பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு கூறியுள்ளார் முதல்வர் பழனிச்ச்சாமி.

முதல்வரின் கடிதம் ஒருபுறமிருக்க, இந்தியாவிலேயே அதிகம் மாசுபட்டிருக்கும் மாநிலமாக பார்க்கப்படும் தலைநகர் டெல்லியில், பட்டாசு இல்லாத தீபாவளியை அனைவரும் கொண்டாடுங்கள் என, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுயபோது, அவர் கூறிய கருத்துகள் இவைதான் -

``கொரோனா அச்சுறுத்தல் மற்றும் காற்று மாசு என இரண்டு சவால்களை எதிர்கொண்டு வருவதால், பொதுமக்கள் பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன். 

தயவு செய்து பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.  பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் உங்கள் சொந்த குடும்பத்தின் உறுப்பினர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள். 

நவம்பர் 14-ம் தேதி இரவு 7.49 மணிக்கு, 2 கோடி டெல்லி குடிமக்கள் ஒன்று சேர்ந்து லக்ஷ்மி பூஜை செய்வார்கள். பூஜையை நான் தொடங்கி வைக்கிறேன். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்"

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

மொத்தத்தில், இவ்வருடம் தீபாவளி இந்தியாவின் பல மாநிலங்களில் வாணவேடிக்கைகள் இன்றியே இருக்குமென சொல்லப்படுகிறது. இது, பட்டாசு வியாபாரிகளை அதிகளவு பாதிக்கக்கூடும் என கணிக்கவும் படுகிறது.