“அதிமுகவுக்கு மீண்டும் ஆதரவு தாங்க” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

“அதிமுகவுக்கு மீண்டும் ஆதரவு தாங்க” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் - Daily news

“அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மீண்டும் ஆதரவு தாருங்கள்” என்று, எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதாரண தொண்டர்களாக இருந்த எங்களை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நிலைகளில் பல பொறுப்புகளை எங்களுக்கு வழங்கி, அளிக்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் நாங்கள் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளோம்” என்று, குறிப்பிட்டு உள்ளனர்.

“தொண்டர்களின் கஷ்டங்களை நாங்கள் நன்கு அறிவோம் என்றும், அதனால் தான், இன்றும் தொண்டர்களோடு தொண்டர்களாக இருந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்றும், கூறியுள்ளனர்.

அதே போல், “கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அரசு அறிவித்த மக்கள் நலத் திட்டங்களினால், அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளோம் என்பதை நாங்கள் உணர்கிறோம் என்றும், எங்களுக்குக் கிடைத்த இந்த நல்வாய்ப்பினை சிறிதும் குறைவின்றி, எங்களது கடமையை நிறைவேற்றி இருக்கிறோம்” என்றும், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூறியுள்ளனர்.

“ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, திமுக வின் தூண்டுதலின் பேரில் எண்ணற்ற போராட்டங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்றது என்றும். அந்தப் போராட்டங்களை எல்லாம் சமாதானமான முறையில் பேசி, அதற்குத் தீர்வு கண்டு, அரசு வெற்றிகண்டு உள்ளது” என்றும், பெருமையோடு நினைவுகூர்ந்து உள்ளனர்.

“திமுக வில் தொடர்ந்து குடும்ப அரசியல், வாரிசு அரசியல் தான் நடந்து வருகிறது” என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர்; ஆனால், அதிமுகவில் இது போன்ற நிலை இல்லை என்றும், கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும், கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புக்கும் பதவிக்கும் வரமுடியும்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளனர். 

“திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நில அபகரிப்பு நடக்கும் என்றும், அராஜக ஆட்சி துவங்கும் என்றும், குடும்ப ஆட்சி தலை தூக்கும் என்றும், தமிழகம் அமளிக்காடாகத் திகழும் என்றும், கட்டப் பஞ்சாயத்து செய்யும் நிலை ஏற்படும் என்றும். பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும், நிர்வாகச் சீர்கேடு ஏற்படும் என்றும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படும்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

இதனால், தமிழ் நாட்டு மக்கள் அமைதியான, ஜாதிக் கலவரம் இல்லாத, அனைத்து சமுதாய மக்களும், நிம்மதியுடனும் வளமான வாழ்வு வாழ, வழி செய்யும் வகையில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், “மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும் என்பதைக் கருத்தில்கொண்டு தான், கீழ்க்கண்டவாறு தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.

அதன் படி, 

- பெண்களின் பணிச் சுமையைக் குறைக்க விலையில்லா அம்மா வாஷிங் மெஷின்.
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1,500 உதவித் தொகை.
- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சூரிய சக்தி அடுப்பு.
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரடியாக விநியோகம்.

- அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம்.
- கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- மகப்பேறு நிதியுதவி ரூ. 18 ஆயிரத்தில் இருந்து, ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு விடுப்பு 1 வருடமாக உயர்வு.
- தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 60 ஆயிரமாக உயர்வு.
- தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டதாரி அல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகைரூ. 25, ஆயிரத்திலிருந்து ரூ. 35 அயிரமாக உயர்த்தப்படும்.

- நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு, பேருந்து கட்டணத்தில் 50 சதவீதம் கட்டணச் சலுகை.
- அரசு வேலைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படும்.
- பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வைப்பு நிதி ரூ. 50,000/-லிருந்து ரூ. 70,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 7,500/- உழவு மானியம் வழங்கப்படும்.
- விவசாய மின் இணைப்பிற்குக் காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் உடனடி மின் இணைப்பு வழங்கப்படும்.

உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதில் பட்டியலிடப்பட்டு உள்ளன.

இதனால், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கின்ற அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும் என்பதால், வருகின்ற 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு உங்களின் பேராதரவினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Leave a Comment