உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தியை போலீசார் வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்திய போது நிலைதடுமாறி கீழே விழுந்த ராகுல் காந்தியை, லத்தியால் அடித்து போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த வழக்கை விரைந்து நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அம்மாநில உள்துறை செயலர் பக்வான் ஸ்வரூப் தலைமையில், அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார்.

அதே நேரத்தில், அந்த சிறுமியின் கிராமத்திற்குச் செல்ல ஊடகங்கள் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்கு இன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். இந்த மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், செல்லக் கூடாது என்று அவர்கள் சென்ற வாகனங்களை போலீசார் வழி மறித்தனர்.

இதனைச் சற்றும் எதிர்பாராத ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும், நொய்டாவிலிருந்து ஹத்ராஸிற்கு நடந்து செல்ல தீர்மானித்தனர். அதன்படி, அவர்கள் இருவரும் அங்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, உத்தரப் பிரதேசம் எல்லை கிரேடர் நொய்டா பகுதியில் போலீசார் ராகுல் காந்தியை வழி மறித்தபோது, அவரை கையால் தள்ளி உள்ளனர்.  அப்போது, இதனை சற்றும் எதிர்பார்க்காத ராகுல் காந்தி, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து, ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா?” என்று உடன் வந்த சகோதரி பிரியங்கா காந்தி ராகுலை பரிசோதித்துப் பார்த்தார். இதனால் அந்த இடத்தில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. அந்த தருணத்தில் ராகுல் பின்னாடியே வந்துகொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து அந்த இடத்தில் அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் மீது உத்தரப் பிரதேச போலீசார் தடியடி நடத்தினர். 

அப்போது, ராகுல் காந்தியையும் போலீசார் லத்தியால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் பதற்றமும் பரபரப்பும் சுற்றிக்கொண்டது. 

இதனையடுத்து தொண்டர்களைச் சமாதானப்படுத்தி இயல்புக்கு நிலைக்கு வந்த ராகுல் காந்தி, “ஹத்ராஸ்க்கு நான் மட்டும் தனியாக செல்கிறேன், வழியை விடுங்கள்” என்று ராகுல் கூறியுள்ளார். ஆனால், “உங்களைக் கைது செய்கிறோம்” என்று போலீசார் கூறியுள்ளனர். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தி, “எந்த சட்டத்தின் கீழ் என்னை கைது செய்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த போலீசார், “188 ஐபிசி சட்டத்தின் கீழ் கைது செய்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து, தடையை மீறி செயல்பட்டதால் ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “போலீசார் என்னை கீழே தள்ளிவிட்டு லத்தியால் அடித்தனர்” என்று, ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றச்சாட்டினார். இதனால், அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் போலீசாருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், ராகுல் காந்தியை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தை காங்கிரஸ் தொண்டர்கள் வழி மறித்து நின்றனர்.  ராகுல் காந்தி செல்லும் போலீஸ் வாகனத்தை முன்னோக்கிச் செல்லவிடாமல், அவரது தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார்கள்.

அத்துடன், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திப்பதில் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனினும், ராகுல் காந்தியிடம் அந்த மாநில போலீசார் நடந்துகொண்ட முறையைக் கண்டித்து அந்த மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை உள்ளிட்ட அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த மாநிலத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, உயிரிழந்த இளம் பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ள நிலையில், அதில் “இளம் பெண் பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படாதது” கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை, அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரான்த் வீர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தடயவியல் ஆதாரங்களுக்காக காவல்துறை காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், உத்திரப் பிரதேச மாநில போலீசார் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக, பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.