இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. விஷால் ஆர்யா நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்தப் படத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் மிரட்டல் எதிரிகளாக நடிக்கின்றனர். நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் என்பவர் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கு கோலிவுட்டில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. படத்தின் ஓப்பனிங் சாங் காட்சிகளையும் படமாக்கினர் படக்குழுவினர். ராமோஜி பிலிம் சிட்டியில் லிட்டில் இந்தியா செட் வடிவமைக்கப்பட்டு, பிருந்தா மாஸ்டர் கோரியோகிராஃபியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. 

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. இதையடுத்து ஊட்டிக்கு விரைந்துள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் படக்குழுவினருடன் இணைந்துள்ளார். ஊட்டி ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பிரகாஷ் ராஜ் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். இயக்குனர் ஆனந்த் சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கடைசியாக அற்புத நடிகர் பிரகாஷ்ராஜ் சார் எங்கள் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். எதிரிகளின் எஜமானர் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் கிளாப் படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்தார். கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ். கே.ஜி.எஃப், தலைவி, அக்னிச் சிறகுகள், வக்கீல் சாப் போன்ற படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

அரண்மனை 3 படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆர்யா திரும்பியவுடன், விஷாலுக்கும் அவருக்குமான காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்ப்பட்டா பரம்பரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. நிஜ வாழ்வில் நண்பர்களாக இருக்கும் விஷால் மற்றும் ஆர்யா, எனிமி படத்தில் எதிரிகளாக எப்படி இருப்பார்கள் என்று யோசனை செய்து வருகின்றனர் கோலிவுட் ரசிகர்கள். 

விஷால் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் சக்ரா. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கிய இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்