கொரோனா விடுமுறைகளுக்கு பிறகு நாளை முதல் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா என்னும் உயிர் கொல்லி வைரஸ் வேகமாகப் பரவியது. இதன் காரணமாக, கடந்த  மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

ஊரடங்கு காரணமாக, பள்ளி - கல்லூரி உள்ளிட்ட அனைத்து விதமான கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன.

தற்போது, தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுவதால், பல்வேறு தளர்வுகளும் தமிழக அரசு அறிவித்து உள்ளன.

அதன் படி, கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 7 ஆம் தேதியான நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 

அதன்படி, சுமார் 7 மாத கால விடுமுறைக்குப் பிறகு நாளை முதல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், காவல் துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அதில், “பல மாதங்கள் கழித்து கல்லூரி திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெயரில் சமூக விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கியமாக, “சென்னையில் உள்ள பிரச்சனையான ரூட்டு தல பிரச்சனைகளில் மாணவர்கள் யாரும் ஈடுபடக்கூடாது என்றும், மீறினால் காவல் துறை மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

குறிப்பாக, “கல்லூரிக்கு மாணவர்கள் வரும் போதும், போகும் போதும் பேருந்துகளின் மேற்கூரைகளில் அமர்ந்து பயணம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதைத் தவிர்த்து பொது மக்களுக்கு இன்னல் தராத வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்” என்றும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.

அதே போல், “மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரைகளை வழங்க வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். 

மேலும், “கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் இருக்க மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார். 

“பொது மக்களுக்கு இன்னல் தரும் வகையில் ஈடுபட்டால், சட்டம் கடுமையாக அவர்கள் மீது பாயும் என்றும், மாணவர்கள் அனைவரும் படிப்பில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்” என்றும், காவல் துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இந்த செய்தி, சக கல்லூரி மாணவர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.