பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! - Daily news

ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை, சட்ட விரோதமாகப் பதிவிறக்கம் செய்து சில கும்பல்கள் விளையாடி வந்த நிலையில், “பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ்” பற்றி பேசுவதற்காகக் கடந்த 2019 ஆம் ஆண்டு மதன் என்பவர், யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கினார். தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாகக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், சமூக வலைத்தளங்களில் சிறுவர், சிறுமிகள் அதிகம் மூழ்கி இருந்தனர். இப்படியான சிறுவர் சிறுமிகளைக் குறிவைத்து ஆன்லைன் கேமான பப்ஜி, ப்ரீ ஃபையர் உள்ளிட்ட விளையாட்டில் நேரத்தைச் செலவிட்டு வந்தவர்களை, மதன் தன் பக்கம் அதிகமான கவனத்தை ஈர்த்தார்.

இதனால், “மதன்' யூடியூப் சேனலுக்கு” 7 லட்சத்திற்கு அதிகமாகவும், “டாக்ஸிக் மதன் 18+” யூடியூப் சேனலுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் Subcribers-ம் சேர்ந்தனர். ஆன்லைனில் விளையாடும் போது, தன்னுடன் விளையாடும் சக போட்டியாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே கொண்டிருந்த யூடியூபர் மதன், தன்னுடன் ஆன்லைனில் விளையாடுவது பெண்கள் என்றால், அவரது வார்த்தைகளில் ஆபாசம் உச்சத்தில் இருக்கும் என்றும், இப்படி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் படி, சென்னையில் பதிவான வழக்குகள் தொடர்பாக மதனை கடந்த மாதம், போலீசார் நேரில் ஆஜராகச் சொன்ன நிலையில் தான், அவர் தலைமறைவானார். இதனையடுத்து, சென்னை பெருங்களத்தூரில் உள்ள மதன் வீட்டில் இருந்து அவரது தந்தை மாணிக்கம், சேலம் மாவட்டத்திலுள்ள அவரது மனைவி கிருத்திகா மற்றும் 8 மாதக் கைக்குழந்தையை அழைத்து வந்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “மதனும் கிருத்திகாவும் இணைந்து 3 யூடியூப் சேனல்களைத் தொடங்கி பப்ஜி விளையாட்டு குறித்து பேசி சேனலில் வெளியிட்டு வந்து உள்ளனர்.

ஆனால், அதில் போதுமான பார்வையாளர்கள் கிடைக்காத நிலையில், குறுக்கு வழியில் விரைவில் பணம் சம்பாதிப்பதற்காக, பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி மதன் வீடியோ வெளியிடத் தொடங்கியதாகவும், இதற்கு சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது என்றும், இதனால் மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வந்ததாகவும், அப்படி கிடைத்த பணத்தில் பெருங்களத்தூரில் 2 சொகுசு பங்களாக்கள், 2 சொகுசு கார்கள் வாங்கியதாகவும்” அவர் மனைவி கிருத்திகா கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் பயன்படுத்திய லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருள்களையும், இதன் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கிய 2 சொகுசு கார்கள், 2 பங்களா ஆகியவற்றைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கணவன் மதனுக்கு உடந்தையாக இருந்த கிருத்திகாவை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.  பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அதே போல், மதனின் ஆபாச ஆடியோக்களை கேட்ட நீதிபதி, கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், “மதனின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு இருப்பதாக” நீதிபதி தண்டபாணி வன்மையாகக் கண்டனம் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, தர்மபுரியில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். ஆக மொத்தகமாக, பப்ஜி மதன் மீது கிட்டதட்ட 120 புகார்கள் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. பப்ஜி மதன் ஜாமீன் கோரி தாக்கள் செய்த மனுக்கள், இரு முறையும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment