டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருவதால், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு இது வரை 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களைக் கடந்து, 150 வது நாளை நோக்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 3 மாதங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அத்துடன், இந்த விவசாயிகள் போராட்டத்தில் 112 நாட்கள் வரை நடைபெற்ற கணக்கிடப்பட்ட எண்ணிக்கையின் படி கிட்டத்தட்ட 300 விவசாயிகள் போராட்ட களத்திலேயே உயிரிழந்துள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்து உள்ளது. இப்படியாக உயிரிழந்த விவசாயிகள் பெரும்பாலும் கடும் குளிர், போராட்டத்தின் போது வாகன விபத்து, மாரடைப்பு ஆகியவற்றால் இறந்து உள்ளனர்.

மேலும், மத்திய அரசுடன் கிட்டத்தட்ட 11 கட்ட பேச்சு வார்த்தை இதுவரை நடைபெற்று உள்ளது. ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள விவசாயிகள், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க மாநிலம் வாரியாக களமிறங்கி உள்ளனர்.

இந்த நிலையில், “விவசாயிகள் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக” மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தானின் சில சுங்கச்சாவடிகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றும், பஞ்சாபில் ரூ.487 கோடி, ஹரியாணாவில் ரூ.326 கோடி, ரூ.1.40 கோடி ராஜஸ்தானில் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றும், குறிப்பிட்டார். 

பிற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தினால் இழப்பு ஏற்படவில்லை என்றும், பஞ்சாப் அரசிடம் சுங்கச்சாவடிகள் இயல்பாக இயங்க வழிவகை செய்ய வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.