கொட்டும் பனியில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 16 வது நாளாக தொடரும் நிலையில், “வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால், நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” என்று, பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
  
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியில் இன்றுடன் 16 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு கூறி வருகின்றனர்.

விவசாயிகளுடன் இது வரை 5 கட்டங்களாக மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியும், அதில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 ஆம் கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. ஆனால், வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள 6 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அதற்கு முதல் நாள் இரவு உள் துறை அமைச்சர் அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதனால், செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய விவசாய சபையின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா, “விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது” என்று தெரிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் தொடர்ந்து இன்றுடன் 16 வது நாளாக போராடி வருகின்றனர்.

நேற்றைய போராட்டத்தின் போது, “நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பாக வரும் 14 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவோம்” என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

அதே போல், “மற்ற மாநில விவசாயிகளும், டெல்லிக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்றும், விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முக்கியமாக, “பிரபல தொழிலதிபர் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் அலைபேசி, சிம்கார்டுகள் மற்றும் இணைய வசதிகள் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும், புறக்கணிக்கப்படும்” என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

அது போல், அதானி தயாரிப்புகளையும் புறக்கணிப்பு செய்வோம்” என்றும், டெல்லியில் போராடும் விவசாயிகள் அதிரடியாக அறிவித்து உள்ளனர். இதற்கு, இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். 

அதன் தொடர்ச்சியாக, வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி புராரி மைதானத்தில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் பேசும்போது, “டெல்லியில் குளிர் அதிகமாக இருப்பதால் வயதானவர்களையும், குழந்தைகளையும் வீடுகளுக்கு அனுப்புமாறு அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், எங்கள் கோரிக்கை நிறைவேறி எங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும் வரை மோடி அரசின் இந்த கறுப்புச்  சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை எந்த குளிரும் தடுத்து நிறுத்தாது” என்று, ஆவேசமாகப் பேசினார். 

இது குறித்து பேசிய மற்றொரு விவசாயி, “மத்திய அரசின் உதவி வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களை பார்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும். இங்கு எந்த அரசு உதவிகளையும் நாங்கள் ஏற்க மாட்டோம். 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றும், அவர் கூறினார். 

மேலும், விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரிவுகள் குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் தோமர் குறிப்பிட்டார். 

“குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒப்பந்த விவசாயம் நடைமுறையில் இருப்பதாகவும், இதில், விவசாயிகளின் நிலத்தை தொழிலதிபர்கள் ஆக்கிரமித்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழவில்லை” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

அத்துடன், “விவசாயிகளின் விளைபொருட்கள் குறித்தே ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும், நிலம் குறித்து ஒப்பந்தம் செய்யப்படுவதில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறினார். ஆனாலும், மத்திய அமைச்சரின் விளக்கத்தை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர். 

குறிப்பாக, “தங்களது கோரிக்கையை ஏற்று, வேளாண் சட்டத்தை ரத்துசெய்ய விட்டால், நாடு முழுவதும் உள்ள ரயில்வே தண்டவாளங்களை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள்” என்றும், விவசாயிகள் சங்கத் தலைவர் பூட்டா சிங் கடும் எச்சரிக்கை விடுத்தார். 

முக்கியமாக, “விரைவில் ரயில் மறியல் போராட்டத்துக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்க உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார். இதனால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.