அகழ்வாய்வு அறிவியலுக்கான பத்திரிகை என்ற புகழ்பெற்ற இதழில், சிந்து சமவெளி நாகரிக மக்களின் உணவுப் பழக்கத்தில் மாமிச உணவு பழக்கம் இருந்ததாகவும் அதில் மாட்டுக்கறியையே அதிகமாக உட்கொண்டதாகவும்  ஆய்வு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. 


இந்த ஆய்வை  இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிலும் அக்‌ஷ்யெதா சூரியநாராயண் எனும் ஆய்வு மாணவி தலைமையிலான குழுவினர் மேற்க்கொண்டனர். 
ஹரப்பன் பகுதிகளில் இருந்து கிடைக்கப்பட்ட 172 பானை ஓடுகளின் கொழுமிய மீதங்களை ஆய்வு செய்ததில்,  அப்பகுதி மக்கள் பெரும்பாலும் மாட்டுக்கறியையே  உணவாகக் கொண்டிருந்தனர் எனவும் மேலும்  மான் இனங்கள், முயல்கள், காட்டுப் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்தும் அவர்களது உணவில் பகுதியளவிற்கு இடம்பிடித்திருந்ததையும் இந்த ஆய்வு சொல்கிறது. 


மாடு , எருமைமாடு உள்ளிட்ட கால்நடைகள் சுமார் 50 -60% வரை பெருமளவிலும் மற்றும் ஆடு 10%  உட்கொள்ளப் பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் அங்கு கிடைத்த எலும்பு மீதங்களைக் கொண்டு கணக்கிட்டிருக்கின்றனர் ஆய்வாளர்கள். 


விவசாய நடைமுறைகள் இருந்ததாகவும் அவை பகுதிக்குப் பகுதி மாறுபட்டதாக இருந்தாகவும், காய்கறிகள், பழங்கள், அரிசி, கோதுமை, பல்வேறு தானியங்கள் மற்றும் பிற எண்ணை வித்துக்கள் என பலவற்றையும் மக்கள் உணவாகப் பயன்படுத்தியதையும் தெரியவந்துள்ளது.


இந்த சிந்து சமவெளி நாகரிகம் தற்போதைய பாகிஸ்தான், வடமேற்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் தான் பரவியிருந்தது. இந்த ஆய்வை மேற்கொள்ள அங்கிருக்கும் ஐந்து கிராமங்களை ஆய்வு குழு தேர்ந்தெடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேந்த அலாம்கிபூர், அரியானாவில் உள்ள லோஹரி ரகோ, மசுத்பூர், கானாக், ஃபர்வானா ஆகிய 5 கிராமங்களிலும் ராகிகர்ஹி அகழாய்வுப் பகுதியிலும் ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.


பசுவதை தடுப்புச் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தி வரும் அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய  பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தின், நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடியிருப்புப் பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள பீங்கான் பாத்திரங்களில் இருந்த கொழுமிய மீதங்களை ஆய்வு செய்ததில் அதில் பெருமளவு பன்றி, எருமைமாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் ஆகியவற்றின் மாமிசமும் கண்டறியப்பட்டுள்ளது.