ஃபேஸ்புக் மூலம் காதலித்து வந்த போலீசார் ஒருவர் ஏமாற்றியதால், அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் 17 வயது சிறுமி தீக்குளித்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19 வது தெருவை சேர்ந்த ஜான் கென்னடி - எலிசபெத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு, கிளின்டன் என்ற மகனும், 17 வயதில் கிரேசி என்ற மகளும் உள்ளனர். 17 வயது மகள், அங்குள்ள மின்ட் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கேட்டரிங் இன்ஸ்டியூட்டில் படித்து வருகிறார்.

தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அனைத்து விதமான கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், கிரேசி தனது 
பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார். இதனையடுத்து, வீட்டில் சும்மாவே இருந்த அவர், தனது செல்போனில் எப்போதும் இணையத்திலேயே மூழ்கி கிடந்ததாகத் தெரிகிறது. 

அப்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக அரக்கோணத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞரோடு, 17 வயது சிறுமி கிரேசி ஃபேஸ்புக் மூலமாகப் பழக்கமாகி உள்ளார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, கடந்த 6 மாத காலமாகவே சிறுமி கிரேசி, அந்த இளைஞரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

ஃபேஸ்புக் மூலமாக பழக்கமான இந்த மகேஷ், சென்னை புழல் சிறையில் காவல் கண்காணிப்பாளரின் துப்பாக்கி பாதுகாப்பு பணியில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

தங்களது மகள் கிரேசி, எப்போதும் செல்போனிலேயே அதுவும் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கி இருப்பதைப் பார்த்து, அவரது பெற்றோர் திட்டி உள்ளனர். 
ஒரு கட்டத்தில் மகளின் காதல் விசயமும், அவரது பெற்றோருக்குத் தெரிய வந்தது. இதனால், மகளை அழைத்துக் கண்டித்து உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, மகள் கிரேசியின் செல்போனை அவரது பெற்றோர் வாங்கி வைத்துக் கொண்டனர். இதனையடுத்து, தனது பெற்றோரை எப்படியோ சமாதானம் செய்து விட்டு, தன்னுடைய செல்போனை வாங்கிய சிறுமி, மீண்டும் தனது காதலன் உடன் சாட்டிங் செய்து உள்ளார். ஆனால், அவர் சரிவர பதில் அளிக்காமல், அந்த சிறுமியோடு பேசுவதைத் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது. 

மேலும், கடந்த 6 மாதமாக காதலித்து விட்டு தற்பொழுது திருமணம் செய்ய மகேஷ் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி கிரேசி, அவரது அம்மாவுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதன் காரணமாகவும், இன்னும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனையடுத்து, நள்ளிரவு நேரத்தில் சிறுமி கிரேசி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்துக்கொண்டு தனது அறைக்கு வந்து, அங்கிருந்த படியே, தலை மற்றும் உடலில் ஊற்றிக்கொண்டு, தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். சிறுமியின் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில், வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்து உள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, 80 சதவீத தீ காயங்களுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துவரும் சிறுமி கிரேசி வீடியோ வாக்கு மூலம் அளித்தார். அப்போது, தனது வாக்கு மூலத்தில் “தனது இந்த நிலைக்கு காவலர் மகேஷ் தான் காரணம்” என்றும், தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட சென்னை எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.