பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று (நவம்பர் 21) சென்னை வந்திறங்கியுள்ளார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தமிழக பா.ஜ.க. மூத்த, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மதியம் 1.45-க்கு அங்கிருந்து காரில் புறப்படும் அவர், கத்திபாரா, கிண்டி, மத்திய கைலாஷ், அடையாறு வழியாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்றார் அமித்ஷா. அப்போது வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தாரைதப்பட்டை, செண்டை மேளம், சிலம்பம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வழி நெடுக நடைபெறுகின்றன. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலை சென்றடையும் அமித்ஷா அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர், மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கத்துக்கு செல்கிறார். அங்கு, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். அதோடு விழாவில் பேருரையும் ஆற்றுகிறார்.

விழா முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஓட்டல் லீலா பேலஸுக்கு வரும் அமித்ஷா, இரவு 7 மணிக்கு தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு பா.ஜ.க. உயர்மட்ட குழுவினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

இரவு ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை 10 மணி அளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். காலை 10.15 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார் அமித்ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பிரமுகர்கள் பட்டியலில் இருப்பதால், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையம் முதல், விழா நடைபெறும் கலைவாணர் அரங்கம் வரையில் வழி நெடுகிலும் 10 அடி தொலைவுக்கு ஒரு போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் மொத்தம் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகின்றனர்.

சென்னை விமான நிலையம், நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கம், அமித்ஷா தங்கும் லீலா பேலஸ் ஓட்டல் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமானலையம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், பென்ஜமின், பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா, சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 04.00 மணிக்கு நடக்கும் அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். விழாவில் ரூபாய் 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், அமித்ஷா வருகையை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எண்ணுரில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த ஆர்பாட்டமானது நடைபெற்றது. ட்விட்டரிலும், GoBackAmithsha என்ற ஹேஷ்டேக், ட்ரெண்டாகிவருகிறது.