விருதுநகர் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. சி.பி.சி.ஐ.டி விசாரணை நிறைவு!

விருதுநகர் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. சி.பி.சி.ஐ.டி  விசாரணை நிறைவு! - Daily news

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் சி.பி.சி.ஐ.டி மாற்றப்பட்ட நிலையில் விசாரணை இன்று நிறைவுற்றது.

விருதுநகரில் இளம்பெண் ஒருவர் தன்னை சிலர் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் உடன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

மேலும் விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தில் தாயாருடன் குடியிருந்து வரும் 22 வயது இளம் பெண்ணிற்கு ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பாலியல் உறவு வைத்ததை வீடியோ பதிவு செய்துள்ளார். அதன் பின்பு திருமணம் செய்துகொள்ள அந்த பெண் ஹரிஹரனை வற்புறுத்தினார்.

இந்நிலையில் ஹரிஹரன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததினால் இளம் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்த போது, ஹரிஹரன் பதிவு செய்த வீடியோ காட்சிகளை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதன் பின்னர் வீடியோவினை அவரது நண்பர்களுக்கு சமூக ஊடகத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஹரிஹரனின் நண்பர்கள் வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டுள்ளதும், ஹரிஹரன் இளம் பெண்ணை அடிக்கடி தொந்தரவு செய்ததும் தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின அடிப்படையில் 8 பேர் குற்றவாளிகள் என தெரியவந்தது. இதில் ஹரிஹரன், மாடசாமி, ஜுனத் அகமது, பிரவீன் ஆகிய 4 பேரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும். சிறார்கள். 18 வயதிற்கு உட்பட்ட இவர்கள் சிறார்கள் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு, நேர்முகமாகவும், மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பிரிவு தாக்கல் செய்யப்பட்டு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் புலன் விசாரணை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை மண்டல ஐ.ஜி. ஆஸ்ரா கர்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆகிேயாரும் விருதுநகரில் முகாமிட்டு புலன் விசாரணையை மேற்பார்வையிட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், சம்பவம் நடந்ததாக கூறப்படும் குடோனுக்கு நேற்று சென்று, அங்கு கிடந்த போதை மருந்துகள்-ஊசிகளை கைப்பற்றினர். விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜீனத் அகமது, மாடசாமி மற்றும் பிரவீன் ஆகிய 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 4 பேரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.  மேலும் அவர்களது நண்பர்களையும் அழைத்து சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

இதைதொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு ஹரிஹரன் மற்றும் ஜீனத் அகமது ஆகிய இருவரையும் போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை செய்ததோடு, அந்த குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மருந்து குடோனில் 2 கட்டில்களுடன் படுக்கையறை,  நவீன குளியலறை ஆகியவை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கிட்டங்கியில் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசி ஆகியவற்றைக் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுபற்றியும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் கைதாகி கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும் இவ்வழக்கு விசாரணையை 60 நாட்களுக்குள் முடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் நேரடியாக கண்காணித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணையை நிறைவு செய்துள்ளது. காவலில் எடுக்கப்பட்ட 4 பேரிடமும் 6 நாட்களாக சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது.

மேலும் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்ததையடுத்து ஹரிஹரன், ஜுனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.  
 

Leave a Comment