புதுச்சேரி அருகே வசிக்கும் வீடு பிடிக்காததால் வீட்டை மாற்ற கோரி ஏ.சி மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரி திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த மொரட்டாண்டி பகுதியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முருகவேல் இறந்துவிட்டார்.  இவர்களது இரண்டாவது மகன் அவருக்கு வயது 23, சுரேஷ்குமார். திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள ஏ.சி மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது வசிக்கும் வீடு தனக்கு பிடிக்கவில்லை என்றும்  வேறு வாடகை வீட்டிற்கு செல்லலாம் என்றும் தாய் நாகம்மாளிடம் சுரேஷ்குமார் கூறி வந்துள்ளார். வாடகை அதிகமாக இருப்பதாக  கூறி நாகம்மாள் வீட்டை மாற்ற மறுத்துவிட்டார். இதனால் கடந்த சில மாதங்களாக வீட்டில் யாரிடமும் அதிகம் பேசாமல் வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தவுடன் தனிமையில் இருப்பதையே சுரேஷ்குமார் வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்த சுரேஷ்குமாரின் ஒரு சில நடவடிக்கையால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சையும் அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை நாகம்மாள் வீட்டு தோட்டத்திற்கு சென்றபோது அங்கு உள்ள மரத்தில் சுரேஷ்குமார் சேலையால் தூக்கிட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம்  போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மரத்தில் பிணமாகத் தொங்கிய சுரேஷ்குமாரின் உடலை கீழே இறக்கினர். சுரேஷ்குமாரின் இரண்டு கைகளிலும் கத்தியால் கீறப்பட்ட காயங்கள் இருந்தது. 

அதனைத்தொடர்ந்து இந்த தற்கொலை சம்பவம்  குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். தன்னைத்தானே கத்தியால் இரண்டு கைகளிலும் கீறிக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சுரேஷ்குமாருக்கு வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.