சிறுமி எரித்து கொலை: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற டிஜிபி உத்தரவு!

சிறுமி எரித்து கொலை: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற டிஜிபி உத்தரவு! - Daily news

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாச்சலூரில் பள்ளி அருகே சிறுமி எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

CBCID

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பாச்சலூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த வாரம் மதிய உணவு இடைவெளிக்குப் பின்னர் மாயமானார். தினசரியும் மதிய உணவு இடைவேளையில் தனது சகோதர சகோதரியுடன் சிறுமி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் கடந்த 16-ம் தேதி உணவு இடைவேளைக்கு சிறுமி வரவில்லை என்பதால் சிறுமியின் அக்கா மற்றும் தம்பி இருவரும் சேர்ந்து சகோதரியை தேடி வந்தனர்.

அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் பெற்றோரிடமும் தகவல் தெரிவித்தனர். அதன்பிறகே மாணவியை உறவினர்களுடன் இணைந்து பெற்றோரும் தேடினர். அப்போது அந்த பள்ளிக்கு அருகில் உள்ள புதர் பகுதியில் நெருப்பு புகை வந்தது. அங்கு சென்று பார்த்த போது அங்கு சிறுமி முகம் எரிந்த நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்ததைக் கண்டு பெற்றோர்களும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடல் எரிந்து போய் மயக்க நிலையில் இருந்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தார்.

மேலும் சிறுமியின் வாயில் துணி அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடற்கூராய்வுக்கு பின் சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் உறுதி அளித்ததையடுத்து சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இச்சூழலில் சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு 8 நாட்கள் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டவில்லை. இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் மேல்மலை கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது சிறுமி கொல்லப்பட்டு 8 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றாவளிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது வாகனங்களில் அழைத்துச் சென்றனர். மேலும் இதனிடையே சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சிறுமி எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment