ரஷ்யா தனது முதல் COVID-19 தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக் V என்ற பெயரில் ஒப்புதல் அளித்ததை அடுத்து தற்போது, எபிவாகொரோனா (EpiVacCorona) என்ற தடுப்பூசிக்கு  ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றில், ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் முதல் தடுப்பூசி வேட்பாளரும் ஸ்பூட்னிக் V ஆகும்.

இரண்டாவது தடுப்பூசிக்கான அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், "நோவோசிபிர்ஸ்கை தளமாகக் கொண்ட வெக்டர் மையம் எபிவாகொரோனா என்ற இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்துள்ளது" என்று கூறினார்.

சைபீரியாவை தளமாகக் கொண்ட வெக்டர் நிறுவனம் இதை உருவாக்கியது. எபிவாகொரோனா அதன் ஆரம்ப கட்ட மனித சோதனைகளை கடந்த மாதம் (செப்டம்பரில்) நிறைவு செய்தது. மருந்து சோதனைகள் மற்றும் மனித சோதனைகளின் முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்னும் தொடங்கவில்லை. மேலும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த போதும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. 

"நாங்கள் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். நாங்கள் எங்கள் வெளிநாட்டு கூட்டாளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறோம், வெளிநாட்டில் எங்கள் தடுப்பூசியை ஊக்குவிப்போம். நோவோசிபிர்ஸ்கை தளமாகக் கொண்ட வெக்டர் மையம் எபிவாகொரோனா என்ற இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்துள்ளது" என்று புடின் கூறினார்.

மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கிய ஸ்பூட்னிக் வி, ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் பயன்படுத்த உரிமம் பெற்றது. எபிவாகோரோனாவைப் போலவே மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு முன்பும் ஸ்பூட்னிக் வி பதிவு செய்யப்பட்டது. ஸ்பூட்னிக் V இன் மனித சோதனை தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.

தற்போது புதிய தடுப்பூசி எபிவாகொரோனாவின் மனித சோதனை நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கும் என்றும், இதில் சுமார் 30,000 பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள் என்றும் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"முதல் தொகுதி 60,000 தடுப்பூசி அளவுகள் எதிர்காலத்தில் தயாரிக்கப்படும், மேலும் வெக்டர் மையம் 40,000 தன்னார்வலர்களை உள்ளடக்கிய பல ரஷ்ய பிராந்தியங்களில் பதிவுக்கு பிந்தைய மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கும். ஒரே நேரத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 150 பேருக்கு மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கவும் இந்த மையம் திட்டமிட்டுள்ளது" என்று துணைப் பிரதமர் டட்டியானா கோலிகோவா கூறினார்.

இப்படியாக கொரோனா வைரசை தடுப்பதற்கான 2வது தடுப்பூசியை பதிவு செய்துள்ள ரஷ்யா, 3வது தடுப்பூசியை இன்னும் ஒரு மாதத்தில் பதிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ரஷ்யா, இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தாலும், ரஷ்யா மட்டுமே கொரோனா தடுப்பூசி கண்டறியும் போட்டியில் முந்தியுள்ளன. கமாலயா நிறுவனம் தயாரித்த ‛ஸ்புட்னிக்-வி' என்னும் தடுப்பூசி கண்டறிந்து, பதிவும் செய்துள்ளது ரஷ்யா. பல கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியதாக கூறும் ரஷ்யா, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பு பணிகளையும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் வெக்டர் மையம் உருவாக்கிய ‛எபிவாக்கொரோனா' (EpiVacCorona) என்ற தடுப்பூசியையும் பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும், 3வது தடுப்பூசியையும் ரஷ்யாவால் விரைவில் பதிவு செய்ய முடியும் என அந்நாட்டு தேசிய பொது சுகாதார மேற்பார்வை அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் அன்னா போபோவா கூறுகையில், ‛3வது தடுப்பூசி இன்னும் ஒரு மாதத்தில் பதிவு செய்யப்படும் என்பதை உறுதியாக கூறுகிறேன்,' என்றார்.

இப்படி அடுத்தடுத்து தடுப்பூசியை கண்டுபிடித்து அதை அறிவிப்பாக வெளியிடுவது, ஆரோக்கியமான விஷயமில்லை என்கிறார்கள் அறிவியலாளர்கள். காரணம், தடுப்பூசி கண்டறிவதை விடவும் முக்கியம், உலக சுகாதார நிறுவனத்திடம் அதற்கு ஒப்புதல் வாங்குவது. ஆனால் ரஷ்யா தனது மூன்று தடுப்பூசியில் ஒன்றுக்குக்கூட அதை பெறவில்லை என்பது வேதனை. பெருந்தொற்றொன்று வேகமாக பரவிவரும் இந்தச் சூழலில், ரஷ்யா முறையாக நடந்துக் கொள்வது, அவசியமாகின்றது.