சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் முத்தையா முரளிதரன் செயல்பட்டதால், அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இயக்குனர் எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். 800 என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி உள்ள ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

தமிழின துரோகி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி எப்படி நடிக்கலாம் என்றும், இந்த படத்தை விஜய்சேதுபதி கை விடவில்லை என்றால், இதுவே அவருக்கு கடைசி படமாக இருக்கும் என்றும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் அரசியல் ரீதியாகவும், சினிமா துறையில் இருந்தும் கிளம்பின.

இயக்குநர் சீனு ராமசாமி, பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, தாமரை, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன் படத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தும், குட்டியும் கூறியுள்ளனர். கவிஞர் தாமரை அதிக சீற்றத்துடன் முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில், விஜய்சேதுபதி நீங்க பிரபாகரன் பாத்திரத்திலே நடிக்கலாம் என்றார்.

விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மட்டுமே விஜய்சேதுபதிக்கு ஆதரவாக இந்த விவகாரத்தில் பதிவுகளை போட்டு வருகின்றனர். மற்றபடி #ShameonVijaysethupathi என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு ஏகப்பட்ட நெட்டிசன்களும், விஜய்சேதுபதியின் இந்த முடிவுக்காக அவரை கண்படி திட்டித் தீர்த்தனர்.

நானும் ரவுடி தான், தர்மதுரை மற்றும் விஜய்சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் என விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்து வரும் நடிகை ராதிகா, தற்போது ஒரு ட்வீட் போட்டு, விஜய்சேதுபதிக்கு தனது ஆதரவை பதிவு செய்துள்ளார். முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என கொதிக்கும் வேலையில்லாத பேர்வழிகள், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை கோச்சாக முத்தையா முரளிதரன் இருக்கிறாரே அது குறித்து ஏன் எந்தவொரு கேள்வியும் எழுப்பவில்லை என காட்டமாக சாடி உள்ளார். முத்தையா முரளிதரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராதிகா பகிரங்கமாக விஜய்சேதுபதிக்கு சப்போர்ட் செய்து, ட்வீட் போட்டுள்ள நிலையில், அவரது ட்வீட்டுக்கு கீழே, ஏகப்பட்ட ரசிகர்கள், ஆதரவு தெரிவித்தும், நெட்டிசன்கள் இது உங்களுக்கு தேவையில்லாத வேலை, விஷயம் தெரியாம பேசுறீங்க என்று விளாசியும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

800 படத்தில் நடிப்பது குறித்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 800 படத்தை ஒரு கிரிக்கெட் வீரரின் பயோபிக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என விஜய்சேதுபதி ரசிகர்கள் சொன்னாலும், மோஷன் போஸ்டரிலேயே கிரிக்கெட்டை தாண்டிய போராட்ட விஷயங்களை தொட்டிருப்பதால், நிச்சயம் இந்த படம் வெறும் கிரிக்கெட் படமாக உருவாகாது என்பது தெரிகிறது.