கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்து சுகாதார பணியாளரை படகு ஓட்டுனர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

corono vaccine

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல்  வேகத்தில் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த பாதிப்பில் இருந்து நாடு இன்னும் மீளாத நிலை காணப்படுகிறது. இவற்றில் டெல்டா, ஒமைக்ரான் பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  பெருந்தொற்று சூழலை முன்னிட்டு கொரோனா தடுப்பூசியை பெருமளவில் மக்கள் விரும்பி செலுத்தி கொள்கின்றனர் என மத்திய அரசானது சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து இருந்தது. எனினும் தடுப்பூசியை போட்டு கொள்வதில் சிலரிடம் தயக்கம் காணப்படுகிறது.  உத்தர பிரதேசத்தின் பல்லியா நகரில் இரண்டு பேர் வெவ்வேறு சம்பவங்களில் தடுப்பூசியை போட்டு கொள்ள எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் நடந்துள்ளன.

இதனைத்தொடர்ந்து படகு ஓட்டும் நபர் ஒருவர், சுகாதார பணியாளரை கண்டதும் தடுப்பூசி போட்டு கொள்ளமாட்டேன் என கூறியதுடன், சில வினாடிகளில் படகில் இருந்து குதித்து, சுகாதார பணியாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். தண்ணீருக்குள் வீசி விடுவேன் என கூறியதுடன், அந்த பணியாளரை நீருக்குள் இழுத்து செல்லவும் முயன்றுள்ளார். எனினும் தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவரை சமரசப்படுத்தி, போராடி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்த செய்தனர்.  இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், நபர் ஒருவர் தடுப்பூசி செலுத்தி கொள்ளமாட்டேன்.  எனக்கு பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதன்பின் தடுப்பூசி செலுத்தி விடாமல் இருக்க ஒரு மரத்தின் மீது ஏறி கொண்டார்.  பணியாளர்கள் அவரிடம் கெஞ்சி, கேட்டுள்ளனர்.  கீழே இறங்கி வர கூறியுள்ளனர்.  இதனை தொடர்ந்து அந்த நபர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டார்.