“கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக கைவிடலாம்” என்று, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா 3 வது அலை வேகமாக வீசிவிட்டு சென்றது. இப்படியாக, மிக தீவிரமாக பரவி வந்த கொரோனா என்னும் கொடிய நோய் தற்போது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் முழுமையாக குறைந்திருக்கிறது என்று கூறும் அளவுக்கு இயல்பு நிலை மெல்ல திரும்பி உள்ளது.

அப்போது, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சார்பில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து, கொரோனா தொற்று குறைந்து வந்ததால், இது தொடர்பான கட்டுப்பாடுகளும் மெல்ல மெல்லி தளர்வுகளும் அளிக்கப்பட்டு வந்தன.

தற்போது, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று முற்றிலுமாக குறைந்து காணப்படும் நிலையில், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பானது 100 க்கும் கீழாகவே குறைந்து உள்ளது. இவற்றுடன், தற்போது நாடு முழுவதும் இயல்பான நிலையே நிலவுகிறது.

அதே நேரத்தில், “கொரோனா 4 வது அலையானது, வருகிற ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி, அக்டோடபர் 24 ஆம் தேதி வரை நீடிக்கும்” என்கிற அதிர்ச்சி தகவலும், கடந்த மாதம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாகவே, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் ஒரு சில கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது வரை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் தான், “ இந்தியா முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்” என்று, அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ள கடிதத்தில், “இந்தியா முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மார்ச் 31 க்குள் முடித்துக் கொள்ளலாம்” என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது. 

அத்துடன், “பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வழங்கப்பட்ட கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திக் கொள்ளலாம்” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

மேலும், “கொரோனா கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்றும், மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

குறிப்பாக, “முகக்கவசம் மற்றும் கை கழுவுதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சுகாதாரத்துறையின் அறிவுரையை பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும், மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி உள்ளது.

மிக முக்கியமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நாடு முழுவதும் கொரேனா கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.