கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றதுமே நமக்கு ஆயிரம் சந்தேகங்கள் கேள்விகள் வந்துவிட்டன. பலரும் தாமே மருத்துவராகி விட்டதைப் போல யோசனை அள்ளித் தெளிக்கின்றனர். இது சரிதானா?

இந்தியாவில் கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைக் கடந்துவிட்டது. 2019-ம் டிசம்பர் மாதம் தொடங்கிய இந்நோய்த் தொற்றில் இருந்து இந்தியா மீள்வதற்குள்,  மீண்டும் அடுத்த அலை வீசத் தொடங்கி விட்டது.

கொரோனாவுக்கே சவால் விடும் வகையில், அதற்கான தடுப்பு ஊசியும் மிக வேகமாக கண்டறியப்படு, ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி கொடுத்துள்ளது மத்திய அரசு.

முதலில், முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வந்த ஊசி, அதற்கு அடுத்து வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தன. அதன்பின்னர் தற்போது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்கிற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பல சந்தேகங்கள் மக்களிடையே எழுந்துள்ளன. குறிப்பாக, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா போன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளாது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ளலாமா கூடாதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இது குறித்து சவிதா மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், தடுப்பூசி குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளவருமான மருத்துவர் அனிதா ரமேஷிடம் பேசினோம்.

"பலரும் கணித்தது போலவே இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா வீசிவருகிறது. சென்றமுறை இந்த நோய் குறித்து எந்த விழிப்புணர்வும் மக்களுக்கு இல்லை. அதனால் பயத்தோடும் எச்சரிக்கையோடும் இருந்தார்கள். ஆனால், இப்போது சென்ற முறையே நமக்கு வர வில்லையே என்ற அலட்சியத்தோடு இருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. சிறு கவனக்குறைவு கூட உங்களுக்குக் கொரோனாவை வரவழைத்துவிடும். எனவே, அலட்சியம் வேண்டாம்.

கொரோனா தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளக் கொரோனா தடுப்பூசி அவசியம். மத்திய அரசு வழிகாட்டியிருக்கும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தயங்காது தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்" என்றவரிடம் கர்ப்பிணி கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ளலாமா என்று கேட்டோம்.

"கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ளக் கூடாது. அவர்கள் மட்டுமல்ல, குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாதீர்கள். ஏனெனில், கொரோனா தடுப்பூசி என்பது பல கட்ட பரிசோதனைகளைக் கடந்து மக்களுக்குச் செலுத்தப்படுகிறது. மத்திய அரசும் இதையே வலியுறுத்தியுள்ளது.

pregnant_women_covid

கொரோனா உலகைத் தாக்கத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள்கூட இன்னும் முடியவில்லை. அதனால், இந்த ஆராய்ச்சியில் கர்ப்பிணி பெண்களை ஈடுபடுத்த வில்லை. அதனால், அவர்களின் உடலில் எப்படி இந்த மருந்து செயலாற்றும் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பெரும்பகுதியில் இதே நிலைதான். சில நாடுகளில் கர்ப்பிணிகளுக்குக் கொரோனா தடுப்பூசி போடுகிறார்கள். நல்ல பலன் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அதற்கான அனுமதி வழங்கப்பட வில்லை.covid

கர்ப்பிணிகள் மருத்துவப் பரிசோதனை தவிர்த்த நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாமல் வெளியே சென்றால் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். அப்படியும் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்திருக்கும்படியான பயணங்களைத் தவிருங்கள். வாக்கிங் செல்லும்போது முகக்கவசம் அணிந்தால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். அதனால், மொட்டை மாடியில் அல்லது வீட்டுக்குள் முகக்கவசம் இல்லாமல் வாக்கிங் செல்லலாம்" என்றார் மருத்துவர் அனிதா ரமேஷ்.