இந்திய சினிமாவில் சிறந்த நடிகராகவும் பன்முக கலைஞராகவும் தமிழ் திரையுலகின் பெருமையாகவும் வலம் வரும் நடிகர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் பீரியட் திரைப்படமாக உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். மும்முரமாக நடைபெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த படத்தையடுத்து தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தனுஷ் அவர்கள் அவரது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. தனுஷ் இயக்கத்தில் முன்னதாக ராஜ் கிரண் நடித்து வெளியான ‘பா. பாண்டி’ விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. வடசென்னை கதைகளத்தில் உருவாகும் இப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகிருந்தது.

மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், கங்கனா ரனாவத், திரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாவும் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த தகவல்களை பகிர, நடிகர் விஷ்ணு விஷால் இந்த தகவலை மறுத்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்த விஷ்ணு விஷால் பதிவில்.

“நான் நடிக்கவுள்ளதாக பரவும் வதந்தி உண்மையில்லை. அந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்று ஆசை இருகின்றது.. இருந்தும் உங்களிடம் இது குறித்து விளக்கம் கொடுக்கிறேன்.. என்னால் அந்த படத்தில் பங்கேற்க முடியாது காரணம் மற்ற படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால்.. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்... ரசிகர்கள் என்னை மன்னிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் விஷ்ணு விஷால் பதிவினை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக கங்கனா ரனாவத் அவர்களும் தனுஷ் 50 பட வாய்ப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. தனுஷ் கேட்டால் நடிக்க தயார் என்பது போல தகவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன் தாஸ் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம் குமார் உடன் கூட்டணி அமைக்கவுள்ளார். பெரும்பாலும் அது ராட்சசன் 2 ம் பாகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.