தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களே மக்களின் மனதிற்கு நெருக்கமான அவர்களின் மனதிற்கு நெருக்காமான படங்களை கொடுப்பதுண்டு. சிலர் மற்ற மொழி படங்களை தமிழ் மக்களுக்காக கொடுப்பதுண்டு. அதன்படி ரீமேக் படங்களை தமிழில் தமிழ் மக்களின் உணர்விற்கேற்ப ஒருங்கிணைத்து கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மித்ரன் ஆர். ஜவகர்.

பிரபல இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் பணியாற்றிய பின் 2007 ல் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ், திரிஷா நடித்துவெளிவந்த படம் ‘ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலு வேருலே’. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து திரைப்படத்தை தமிழில் ரீமேக்க செய்ய மித்ரன் ஜவகருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் தனுஷ், நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ‘யாரடி நீ மோகினி’. தமிழில் அமோக வரவேற்பை பெற்றது. தனுஷ், நயன்தாரா திரைவாழ்வில் இந்த படம் முக்கிய படம் என்று கூட சொல்லலாம். அந்த அளவு தமிழ் வாழ்வியலை உணர்ந்து காட்சியமைத்திருப்பார் மித்ரன் ஜவகர். யாரடி நீ மோகினி வெற்றியை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு படமான ‘ஆர்யா’ படத்தின் ரீமேக்கை தனுஷை வைத்து தொடங்கினார். ‘குட்டி’ என்ற பெயரில் வெளியான குட்டி படத்திற்கு எதிர்பார்த்தபடி மக்களின் வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் பிரபலமடைந்தது.

அதன் பின் மீண்டும் தனுஷுடன் மூன்றாவது முறையாக கை கோர்த்தார் ஜவகர். தெலுங்கு படமான ‘ரெட்டி’ படத்தை ‘உத்தமபுத்திரன்’ என்ற பெயரில் இயக்கினார். விஜய் ஆண்டனியின் இசையில் விவேக் காமெடியில் திரைப்படம் ஹிட் அடித்தது. மூன்றாவது முறையாக தனுஷ் ஜவகர் கூட்டணி தெலுங்கு படங்களை ரீமேக் செய்து வெற்றி பெற்றது.

ஒரு இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘தட்டத்தின் மரியது’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய புது முகங்களுடன் 2016 களமிறங்கினார் மித்ரன் ஜவகர். ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் வெளியான படம் நினைத்த அளவு அவருக்கு கை கொடுக்க வில்லை .பின்னர் மீண்டும் ஒரு இடைவெளியை கையில் எடுத்தார் அதன் பின் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் ஜோதி அருணாசலம் எழிச்சூர் அரவிந்தன் எழுத்தில் ‘மதில்’ என்ற படத்தை இயக்கினார். ஒடிடி யில் வெளியானதால் பெரும்பாலும் படம் வந்ததும் பலருக்கு தெரியாமல் போனது

அதன்பின் நீண்ட நாள் வெற்றியை ருசிக்காத இயக்குனர் ஜவகர் மீண்டும் தனுஷ் எனும் ஆயுதத்தை கையிலெடுத்து பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் கடந்த ஆண்டு களமிறங்கிய படம் ‘திருச்சிற்றம்பலம்’. தனுஷ் கூட்டணியில் இது நான்காவது படம். அனிரூத் இசையில் பாடல்கள் பட்டிதொட்டி தோறும் பிரபலமடைந்து கடந்த ஆண்டு வெளிவந்த பிளாக் பஸ்டர் படங்களில் ஒரு படமாக அங்கீகரிக்கப்பட்டது.

அதன் படி தனுஷ் ஜவகர் கூட்டணி மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மித்ரன் ஜவகரின் அடுத்த படம் குறித்த தகவல் இணையத்தில் பரவியது. ரசிகர்களின் அனுமானத்தில் பரவிய தகவல்களுக்கு இயக்குனர் ஜவகர் தனது ட்விட்டர் பதிவு மூலம் முற்றுபுள்ளி வைத்தார்

அதில் அவர், “திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதை வேலைகளில் இருக்கிறேன். வேறு எந்த படமும் பண்ணவில்லை.என் பெயரில் வெளியிலிருந்து வரும் பொய்யான செய்திகளையோ,விளம்பரங்களையோ யாரும் நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் Twitter பக்கத்தில் பதிவிடுவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் படி தனது புதிய படத்திற்கான கதையை எழுதி வருகிறார் என்ற தகவலுடன் வதந்தியை நிறுத்தினார் ஜவகர். மேலும் அவர் எழுதி வரும் புதிய படத்திற்கான கதையில் தனுஷ் கதாநயகனாக அமைவாரா என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.