தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய இழப்பாக நேற்று (பிப்ரவரி 19) நடிகர் மயில் சாமியின் மறைவு இருந்தது. மிமிக்ரி கலைஞராக தனது வாழ்கையை தொடங்கி மிக முக்கியமான நகைச்சுவை கலைஞராக வளர்ந்த மயில் சாமி தனது 57 வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். . நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த குணசித்திர நடிகராகவும் ரசிகர்களை ரசிக்க வைத்தவர் மயில் சாமி. அவரது மறைவு திரைத்துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வருத்தங்களை நெகிழ்ச்சியுடன் இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டும் வருகின்றனர். அவரது திடீர் மறைவு மிகப்பெரிய இழப்பாக தமிழ் சினிமா இன்று கருதி வருகிறது.

தனது தனித்துவமான நடிப்பின் மூலம் திரைத்துறையில் மிகப்பெரிய ஜாம்வானாக வலம் வந்த மயில் சாமியின் உடலுக்கு நேற்று காலை முதல் திரை பிரபலங்கள் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். அதன் படி திரைத்துறையின் முக்கிய நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இந்திய சினிமாவின் மிக முக்கியமான பிரபலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று மயில் சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,

"என்னுடைய நெடுங்கால நண்பன், அவருடைய 23 வயதிலிருந்தே எனக்கு தெரியும். மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருக்கும்போதே எனக்கு தெரியும்.. அவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக இருந்து அதன் பிறகு நகைச்சுவை நடிகரா திரைத்துறையில் இருந்தார். அவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். அதைவிட தீவிர சிவபக்தர்.. அடிக்கடி நாங்கள் சந்திப்போம். நான் குதூகலத்துடன் திரைத்துறை பற்றி அவரிடம் கேட்பேன்.‌‌ ஆனால் அவர் அதை பற்றி பேசமாட்டார். சிவன் மற்றும் எம்.ஜி.ஆர் சார் பற்றி தான் பேசுவோம்.

நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இணைந்து நிறைய படங்களில் நடிக்கவில்லை. அது ஏன்னு புரியல.. ஒவ்வொரு முறை கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் நடக்கும் போது அங்கு போயிடுவார். அங்க இருக்கும் கூட்டத்தை பார்த்து அவருடைய படத்திற்கு கூட்டம் வந்தது போல் நினைத்து சந்தோஷப்படுவார். அங்கிருந்து ஒவ்வொரு தடவை எனக்கு அழைத்து அதை பற்றி பேசுவார். கடைசி முறை என்னால் வேலை விஷயமாய் பேசமுடியவில்லை. பின் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தேன் நான் மறந்து விட்டேன். விவேக் மற்றும் மயில் சாமி ஆகியோரின் இழப்பு சினிமா துறைக்கு மட்டுமல்ல சமூகத்திற்கு பெரிய இழப்பு... இரண்டு பேரும் சிந்தனைவாதிகள். நல்ல சமூக அக்கறை கொண்ட மனிதர்கள். அவர் சிவராத்திரி அன்று மறைந்தது எதோ தற்செயலாக நடந்தது கிடையாது அது ஆண்டவன் கணக்கு. அவருடைய தீவிர பக்தனை அவருடலய உகந்த நாளில் அழைத்து கொண்டார். அவருடைய குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.. அவருடைய வாரிசுக்கு திரைத்துறையில் நல்ல வாழ்க்கை அமைத்து தர சொல்லி அந்த ஆண்டவரை வேண்டுகிறேன். என்றார்.

மேலும் சிவராத்திரியில் சிவனுக்கு பால் அபிஷேகம் ரஜினிகாந்த் செய்ய வேண்டும் என்று மயில்சாமி சிவமணியிடம் பேசியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேட்கையில் அவர், "நானும் அதை கேள்வி பட்டேன். நான் இன்னும் சிவமணியுடன் பேசவில்லை. நிச்சயம் விவரமா தெரிஞ்சிக்கிட்டு அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்". என்றார் ரஜினி காந்த். தற்போது ரஜினிகாந்த்தின் இரங்கல் பேச்சு இணையத்தில் ரசிகர்கள் வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.