இந்திய சினிமாவின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை திரை சினிமா முதல் இன்றைய நவீன தொழில்நுட்பம் நிறைந்த படங்கள் வரை ரசிகர்களை காலம் கடந்து உற்சாகப்படுத்தி வருபவர். பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஊக்கமாக திகழ்பவர் ரஜினிகாந்த். பல தசாப்தங்களாக பல போட்டி நட்சத்திரங்களையும் முந்திக் கொண்டு இன்னுமும் அதே உச்சத்தில் தனித்து உலகளவில் பெரும் ரசிகர் படையுடன் இருந்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், சுனில், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் பல நட்சத்திரங்களுடன் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை மற்றும் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஜெயிலர் படத்திற்கு கொடுத்துள்ளது.

தற்போது மிக மும்முரமாக ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது. கண்காட்சியை முன்னதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் திறந்து வைத்தார்.

முன்னதாக இந்த கண்காட்சிக்கு வருகை தர மாண்புமிகு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து புறப்பட்டு ரஜினிகாந்த் அவர்கள் நாளை மார்ச் 12ம் தேதியுடன் நிறைவடையும் இந்த கண்காட்சியினை இன்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இவருடன் நடிகர் யோகி பாபு அவர்களும் கண்காட்சிக்கு சென்றிருந்தார்.

கண்காட்சியில் வைக்கப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் குறித்து வைக்கப்பட்ட நினைவு புகைப்படங்கள், சிலைகளை பார்வையிட்ட பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

“ரொம்ப அருமையான ஒரு கண்காட்சியம் இது.. என்னை ரொம்ப நாளா சேகர்பாபு அவர்கள் அழைத்து கொண்டு இருந்தார்கள் . நான் அப்போது படப்படிப்பில் இருந்தேன்.‌ அப்போது கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.சேகர்பாபு ரொம்ப விசுவாசமானவர், ரொம்ப அன்பானவர், அவருக்கு இன்னொரு முகமும் இருக்கு..‌ 'பாட்ஷா' மாதிரி..‌

இந்த கண்காட்சியின் வேலைப்பாடுகள் மிக அருமையாக உள்ளது. மதிப்பிற்குரிய என் இனிய நண்பர் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுடைய வாழ்க்கை பயணமும் அரசியல் பயணமும் இரண்டும் ஒன்றுதான்.. கிட்டத்தட்ட 54 வருஷம் அது...கட்சியில் உழைத்து படிப்படியாக முன்னேறி இப்போது அவர் முதலமைச்சராக இருக்கறதுக்கு காரணம் அது மக்கள் அவருடைய உழைப்பிற்கு கொடுத்த அங்கீகாரம். அவர் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து மக்கள் சேவை என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தையடுத்து லைகா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கவுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.