'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த சாய் காயத்ரி! வீடியோ உள்ளே

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக காரணத்தை தெரிவித்த சாய் காயத்ரி,sai gayathri opens about why she quit pandian stores | Galatta

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றாக ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த மெகா சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒன்றான கண்ணன் கதாபாத்திரத்தின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா என்னும் ஐஷு கதாபாத்திரத்தில் முதலில் வைஷாலி தணிகா நடித்திருந்தார். பின்னர் அவருக்கு பதிலாக VJ தீபிகா லட்சுமணபாண்டியன் மாற்றப்பட்ட நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து நடிகை சாய் காயத்ரி ஐஷு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகை சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இது தொடர்பாக நமது கலாட்டா தமிழ் சேனல் சார்பாக நடிகை சாய் காயத்ரியை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பேசிய போது, "திடீரென நீங்கள் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து ஐஷு கதாப்பாத்திரத்தில் இருந்து விலகியதாக கேள்விப்பட்டோம் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது அது உண்மையா?" எனக் கேட்டபோது, “ஆமாம் அது உண்மைதான் நிஜமாகத்தான் விலகி இருக்கிறேன்.” என பதிலளித்தார். தொடர்ந்து "இப்போது உங்களுடைய கதாபாத்திரம் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுப்பதாக தான் போய்க்கொண்டிருக்கிறது தற்போது உங்களை மையப்படுத்தி தான் கதை நகர்கிறது திடீரென நீங்கள் விலகி இருப்பது உங்கள் ரசிகர்கள் அனைவருக்குமே அதிர்ச்சி தான் என்ன காரணத்திற்காக இப்படி ஒரு முடிவு?" என கேட்டபோது, 

“இது இன்று திடீரென எடுக்கப்பட்ட ஒரு முடிவு கிடையாது இது ஒரு ஒன்றரை வருடங்களாக நான் ஒரு இடம் கொடுத்து காத்திருந்து ஒரு விஷயம் நடக்காததாலும் வேறு ஒரு விஷயம் நடப்பதினாலும் நான் எடுத்த முடிவு தான் இது. நடக்காதது என்ன என்று கேட்டால் ஒரு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு கதை சொன்னார்கள். இப்படித்தான் இந்த கதாபாத்திரம் இருக்கும். இது கொஞ்சம் நடிக்க நிறைய இடம் இருக்க கூடிய ஒரு கதாபாத்திரம். அதனால் தான் உங்களை மாற்றி இருக்கிறோம். நீங்களும் நன்கு தைரியமாக நடிக்க வேண்டும். ஒரு அகிலாவின் அடுத்த வெர்ஷன் மாதிரி நீங்கள் இருப்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு ஒரு தொழில் இருக்கும், சலூன் தொழிலில் இருக்கும். குடும்பம் தடுமாறும் போது நீங்கள் தூக்கி நிறுத்துவீர்கள். தப்பு என்றால் தட்டி கேட்பீர்கள். இதுதான் உங்கள் கதாபாத்திரம், ஆனால் ஒரு 2K கிட்ஸ் எப்படி செய்வார்களோ அந்த மாதிரி நீங்கள் செய்வீர்கள் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் அவர்கள் சொன்ன இந்த கதை வரவே இல்லை. நான் உள்ளே வந்த சமயத்தில் இருந்து இப்போது வரும் அப்போது வரும் என்று பார்த்தேன். வெவ்வேறு கதைகள் நடந்தன. கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தும் வகையில் ஒரு நைட்டி சீக்வன்ஸ் வந்தது. எனக்கும் அது புரிந்தது. முதல் முறை நான் வருகிறேன். அதற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும், என்னையும் கொஞ்சம் காட்ட வேண்டும் யார் உள்ளே வந்திருக்கிறார்கள் என பார்க்க வைக்க வேண்டும், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக நான் கொஞ்சம் இடம் கொடுத்தேன். கொஞ்ச நாள் போனது அதன் பிறகு நான் கேட்டேன், “என்ன ஆயிற்று எனக்கு ஒரு கதை சொன்னீர்களே 100 எபிசோடுகள் இப்படித்தான் இருக்கும் என்று சொன்னீர்களே அது வரவில்லையே?” என்று கேட்டேன். அது வரும் வரும் என்றார்கள். பின்னர் ஒரு 8-9 மாதங்கள் கழித்து அந்த கதை வந்தது. ஆனால், அது வந்து.. என்ன என்று நாம் பார்ப்பதற்குள்ளையே அது காணாமல் போய்விட்டது. பின்னர் சரி நமக்காக அந்த கதைக்காக நாம் காத்திருக்க வேண்டாம். நமக்காக ஒரு வேலை கொடுத்திருக்கிறார்கள், அதை சரியாக செய்து முடித்துவிட்டு போய்விடுவோம் என நினைத்து நடித்துக் கொண்டிருந்தேன். எனவே எனக்கான கதை இருக்கிறதோ இல்லையோ… எனக்கான வசனங்கள் இருக்கிறதோ இல்லையோ… என்னுடைய பாஸ் சொன்னதற்காக, நான் அவர் கொடுத்த வேலையை செய்கிறேன். அவரை நம்பி தான் நான் இருக்கிறேன். அவர்தான் எனக்கு எல்லாமே கொடுத்தார். சரவணன் மீனாட்சி ஆக இருக்கட்டும், ஈரமான ரோஜாவே ஆக இருக்கட்டும், இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆக இருக்கட்டும், எனக்கு கிடைத்த விருது எல்லாமே அவர் மூலம் எனக்கு கிடைத்தது தான். அவருடைய வார்த்தை, கண்டிப்பாக ஒரு நாள் வரும் என்று நினைத்து தான் இருந்தேன். இல்லையென்றால் நான் வந்த ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ, 3 மாதத்திலோ, 6 மாதத்திலோ இந்த முடிவை நான் எடுத்திருப்பேன். எனக்கும் புரிந்தது இது ஒரு பிரைம் டைமில் வரக்கூடிய சீரியல் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் செய்கிறார்கள் என்று. இந்த நிலையில், திடீரென எனக்கான கதை வந்தது. அந்தக் கதை ஒரு 2K கிட் வீட்டில் பண்ணக்கூடிய ஒரு ட்ராக். ஆனால் அந்த டிராக் சிலருக்கு நாம் நன்றாக செய்கிறோம் என இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு நான் செய்வது தவறாக தெரியும். தவறாக என்றால் சில விஷயங்களை ஸ்பைஸ் ஏற்றுவதற்காக செய்திருக்கிறார்கள். இந்த மொத்தக் கதையை நான் இப்போது சொல்லிவிட முடியாது. அது மக்கள் மத்தியில் கொஞ்சம் தவறாக இருக்கலாம். அவர்களை எரிச்சலூட்டும் வகையில் இருக்கலாம். அவர்களுக்கு பிடிக்காமல் போகலாம் அல்லது பாராட்டும் வகையிலும் இருக்கலாம். ஒரு நடிகராக எது கொடுத்தாலும் அந்தக் களத்தில் செய்யக்கூடிய ஒரு ஆளாக இருப்பதுதான் என்னுடைய வேலை. ஆனால் கதாபாத்திரமே இங்கு மாறக்கூடிய வாய்ப்பு நிறைய இருப்பதால் நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது. தனிப்பட்ட முறையில் நமக்கு என ஒரு திருப்தி இருக்கும் அல்லவா? வேலை முடித்து வந்தவுடன் இன்றைக்கு ஏதோ ஒன்று செய்து விட்டோம் என்ற ஒரு திருப்தி இருக்கும் அல்லவா ரொம்ப நாட்களாகவே எனக்கு இங்கு இல்லை!!” எனக் குறிப்பிட்டு நடிகை சாய் காயத்ரி பேசியிருக்கிறார். மேலும் பல முக்கியமான விஷயங்களை நடிகை சாய் காயத்ரி நம்மோடு பகிர்ந்திருக்கிறார். அந்த முழு வீடியோ இதோ…
 

1990's-களின் இனிய நினைவுகளாக பிரபுதேவா - ரெஜினா கெஸன்ட்ராவின் ஃப்ளாஷ்பேக்... கவனிக்க வைக்கும் அசத்தலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

1990's-களின் இனிய நினைவுகளாக பிரபுதேவா - ரெஜினா கெஸன்ட்ராவின் ஃப்ளாஷ்பேக்... கவனிக்க வைக்கும் அசத்தலான ட்ரெய்லர் இதோ!

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் நடிகர்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய ருசிகர தகவல் இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் நடிகர்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய ருசிகர தகவல் இதோ!

சிலம்பரசன்TRன் STR48 படத்தின் அதிரடியான லுக் இதுதானா? சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் மாஸ் புகைப்படம் இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் STR48 படத்தின் அதிரடியான லுக் இதுதானா? சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் மாஸ் புகைப்படம் இதோ!